Wednesday, November 4, 2009

அம்மா சொல்படி ராஜூ: 13. அந்த நாளும் வந்திடாதோ?

அம்மா சொல்படி ராஜூ: (அந்த நாளும் வந்திடாதோ!)

பகுதி 12: 29 10 2009

(இடி விழுந்தது)

... அப்போது என் முதற்பிள்ளைக்கு 4 வயது இருக்கும். 55,56 பிறகு ஒரு பெண் எனக்கு 57, அந்த பெண்ணை என் அம்மாவிடம் விட்டு இருந்தேன். நாங்கள் போய் என்ன செய்வது. ஆனால் நாத்தனாருக்கு நிறைய நகை 58 போட்டிருந்தார் அவர் புருஷன். என் நாத்தனார் சொன்னாள். உனக்குப் பெண் இருப்பதால் நீயே எடுத்துக்கொள் என்று சொன்னாள். ஆனால் என் புருஷன் வரதாச்சாரியாரை கேட்காமல் நான் வாங்கிகொள்வது தப்பு என்றும் சொல்லிவிட்டார். ரொம்ப நல்லதாகப்போச்சு. 59 இப்படியிருக்கும் போது நான் நாலாவது பிரஸவத்திற்கு போனேன், என் அப்பா வீட்டிற்கு. அப்போது எனக்குப் பெண் பிறந்தது. 60 அதே மாஸத்தில் என் அப்பாவிற்கு (அடித்தல், திருத்தல்)... அப்போது செட்டியார் வீட்டு வேலை விட்டு விட்டார். நாதன் கம்பெனி என்று பிஸினஸ் நடத்தினார். அந்த சமயத்தில் தான் 60வது கல்யாணம் நடந்தது. ரொம்ப நன்றாக நடந்தது. அரியக்குடியிலிருந்து யானை மேல் பூர்ணகும்பத்துடன் புடவை வேஷ்டி எல்லாம் என் அப்பாவிற்கு வந்தது. 61 அதிலிருந்து எனக்கு ஆறாவது குழந்தை பிறக்கும் வரையில் செழிப்பாக இருந்தது. என் தம்பி சரியாக படிக்கிறதில்லை. இருந்தாலும், அவனுக்கும் கல்யாணமாகி இரண்டு குழந்தை பிறந்து இறந்தது.

பிறந்து இறந்துவிட்டது. அப்பா தான் என்ன செய்வார்? இப்படியிருக்கும்போது, என் அப்பா மாஸம் ஒரு தரம் ஸ்ரீரங்கம் வருவார். அப்போது வீட்டில் கார் இருந்தது. டைரவர் நாரயணன் என்று இருந்தான். அவன் தான் ஒரு தரம் ஸ்ரீரங்கம் அழைத்துப் போனான். அப்போது பெருமாள் சேவித்து விட்டு திரும்பும்போது ஒண்ணுக்குப் போகலாம் என்று காரை நிறுத்தச்சொல்லி, இறங்கி அங்கு ஒரு இடத்தில் ஒண்ணுக்கு போய்விட்டு எழுந்தார். அப்போது காலில் முள்ளு தைத்துவிட்டது என்று ஊருக்கு வந்துவிட்டார், ஒரு வாரம் ஆனதும் காலில் பெரியதாக வீங்கிவிட்டது. வலி தாங்காமல் டாக்டர் நாராயனசாமி என்கிறவர் எங்கள் குடும்ப டாக்டர். அவர் வந்து பார்த்து ஆபரேஷன் செய்தாராம். அது நன்றாகத் தேவலை. ஆனால், ஏதோ ஒரு உடம்பு வந்து ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டாராம். 62 அப்போது எல்லாம் நான் என் புருஷனுடன் உசிலம்பட்டி என்ற ஊர் மதுரை அருகில் இருக்கிறது. அங்கு தான் இருந்தேன். என் அப்பா உடம்பு விஷயம் பற்றி எனக்கு லட்டர் வரும். நான் வருகிறேன் என்றால் வரவேண்டாம் என்று போடுவார்கள். இப்படியிருக்கும்போது தான் நான் ஐந்தாவது உண்டாகியிருக்கிறேன். என்ன செய்வது? ஆனால் முதல் குழந்தை பிறக்கும்போது எனக்கு 17 வயது? இரண்டு வயது வித்யாஸமாக எனக்கு குழந்தை பிறக்கும். என் மாமியாரும் இல்லாததினால் என் அப்பாவே கவனிக்க முடிய ஆயிற்று. என் மாமனார் மாத்திரம் இன்னம்பூரில் இருக்கிறார். இப்படியிருக்கும் போது தஞ்சாவூரில் இருந்த நாத்தனார் லட்டர் போட்டார். என்ன என்றால், என் மைத்துனர் இரண்டு பையன்களையும் தான் படிக்க வைத்துக்கொள்வதாகவும், உன் பிள்ளை பெரியவனை என்னிடம் விட்டால் என் பிள்ளை இருவருடன் நன்றாகப் படிக்கலாம். தவிர, கல்கத்தாவிலிருந்து நாமு என் பிள்ளையை நீ வைத்துக்கொண்டு படிக்க வை; நான் பணம் அனுப்புகிறேன் என்று லட்டர் போட்டிருக்கிறாள். நீ என்ன சொல்கிறாய் என்று அந்த நாத்தனார் லட்டர் போட்டாள். அதற்கு பதில் போட்டுவிட்டார். பிள்ளையை அனுப்பி வைக்கிறேன் என்று. எனக்கு மூன்றாவது பிள்ளை பிறக்கும்போது தான் என் மைத்துனருக்குக் கல்யாணம். அவர் கல்யாணத்தை தஞ்சாவூர் மாப்பிள்ளை செய்து வைத்தார். அவர் திடீரென்று இறந்து விட்டதால், நாத்தனார் தனியாக இருக்க வேண்டாம் என்றும், என் புருஷன் தன் பிள்ளையை தஞ்சாவூருக்கு அனுப்பிவைத்தார். அதே போல் நாமு என்கிற நாத்தனாரும் அவள் பிள்ளையை அனுப்பிவைத்தாள். இவர்களையும், தம்பியையும் வைத்துக்கொண்டு63 நாத்தனார் கொஞ்ச நாள் தஞ்சாவூரிலேயே இருந்தாள். பிறகு, நான் மூன்றாவது குழந்தை பிறந்து 3 மாஸத்தில் உசிலம்பட்டி போய்விட்டேன். அப்போது எல்லாம், என் அப்பா நன்றாக இருந்தார். நல்ல பணம் சம்பாத்தியம் உண்டு. இப்படி காலம் போய்க்கொண்டிருந்தது. இப்படியிருக்கும் போது நான் ஐந்தாவது உண்டாகியிருந்தேன். அப்போது என் அப்பாவிற்கு ஏதோ கொஞ்சம் தேவலை. என்னைக் கவலைப்படவேண்டாம். ஆராவமுதுவை அனுப்பிவைக்கிறேன். அவனோடு ருக்மணியை அனுப்பி வையுங்கள் என்று என் அப்பா லட்டர் போட்டார். அதே போல் நான் ஒன்பதாவது மாஸம் என்னிடம் இருக்கும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிரஸவத்திற்கு காரைக்குடி வந்தேன். அந்த சமயத்தில் என் அப்பா நடத்துகிற அரியக்குடி உத்ஸவ வேத பாராயணமும் நடந்து கொண்டிருந்தது. 64 அதோடு நம்ம ஆசாரியன் ஆக்கூர் ஆண்டவனை ஒரு வருஷம் வைத்து ஆராதனை நடத்தினார்...

(அந்த நாளும் வந்திடாதோ!)

55. அன்று:

தஞ்சாவூர் ஸ்டேஷனில் இஞ்சின் தண்ணி குடித்ததை வியப்புடன் பார்த்ததும், படியேறி ஜட்கா வண்டி பிடித்ததும், வீடு பூரா நான் அத்திம்பேரின் சடலத்தைத் தேடியதும் நினைவில் இருக்கிறது. அன்று மதியம் மச்சிலிருந்து பெரும்கூச்சல் கேட்டு ஊரெல்லாம் ஓடி வந்தது. (என்னடா என்று தும்பி - அவரின் இரண்டாவது மகன் - கேட்டான். மச்சிலே போட்டிருக்குன்னு சொன்னான். ஏறி தேடியிருக்கிறேன். இறங்கத்தெரியவில்லை. சடலம் எழுந்தா வம்புன்னு கூச்சல். செக்காணூரணிப்பாட்டி மோர் காச்சி கொடுத்து, கட்டி கொண்டாள். (அவள் என் அம்மாவுக்குப் பாட்டி. எனக்கு காவல் தெய்வம். காரைக்குடி முத்தூரணீக்கரை திண்ணைப்பள்ளிக்கூடத்தில் வித்யாப்யாஸம். ... வாத்தியார் [பேர் வேண்டாம் - பாஸ்வெர்ட்] அடிச்சார். பாட்டிட்டே சொன்னாள். அவரை வைதாள், “... கட்டேலே போக! குழந்தை மேல கை வச்சே, கண்டங்கண்டமா வெட்டி குளத்தலே போட்ருவேன்.” அப்பறம் ஐயா தான் ஹீரோ!).

56. இன்று:

அக்கால வரதக்ஷிணைக்கொடுமைக்கு பலியானார், என் அத்தை என்ற வ்யாகூலம். ஆயுசுக்கு கண்ட கண்ட இடங்களில் பிள்ளைப்பேறுக்கு உதவி, என் பெண் பிறந்தபோது கூட. அவள் பெண் தெய்வம். சுயகல்விக்கு அவருக்கு ஈடு கிடையாது. எப்படியோ இருக்கவேண்டியவள் எங்கள் நல்ல குடும்பத்திலேயே, இன்னல்களுக்கு இரையானார் என்று வருந்துகிறேன். ஆறுதல்: அவருக்கு பக்கபலம் வஸந்தா, என் மனைவி.

57. அவள் ஜெம்பகம், என் உயிர்த்தோழி. இப்போது இல்லை.

58. அதன் மேல் எத்தனை பேருக்கு கண்!

59. ஆண்கள் முடிவு எடுப்பார்கள். பெண்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள்.

60. கமலா. அவள் வீட்டில் தான் வாழ்கிறேன். இன்று சில நண்பர்களைத்தவிர, என்னை ‘டா’ போட்டு அழைக்கும் உரிமை, அவளுக்கு.

61. எனக்கு நினைவு இருக்கிறது. அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் கச்சேரி. ரொம்ப நாளுக்கு பிறகு தான் தெரியும், அவரும், நாடகச்சக்கரவர்த்தி நவாப் ராஜமாணிக்கம் அவர்களும் தாத்தாவுக்கு நண்பர்கள் என்று.

62. செய்வினையோ என்று பேசிக்கொண்டார்கள் என்று நினைவு.

63. இதில் ஒரு நுட்பம். அத்தைக்கு வருமானம் இருக்க ஒரு உத்தி, இது.

64. உத்ஸவம்னா, பசங்களுக்கு கொண்டாட்டம். மேற்பார்வை கிடையாது. விடியல் காலத்திலே, தேசாந்திரி மாதிரி, கோயில்லே தோசை; குளத்திலேயே வாசம்; தாத்தா உபயதாரர் என்பதால், வெள்ளித்தடி ஒன்று தாங்கி வருவார், பெருமாள் ஊர்கோலம் வரச்ச. அதை பிடுங்கிண்டு, நானும், என் தம்பியும், பேண்ட்மாஸ்டர் மாதிரி, சுழுற்றிண்டு வருவோம். அப்பப்போ தேவதாசிகள் மேலே ஒரு கண்ணு. புரியாது; ஆனா புரியும். வேத பாராயாணகோஷ்டியோட நடந்து தாகசாந்தி. உடனே ஓடிப்போய், பின்னாலே வரும் திவ்யபிரபந்தகோஷ்டியோட தாகசாந்தி.. அந்த நாளும் வந்திடாதோ!

No comments:

Post a Comment