Wednesday, November 4, 2009

அம்மா சொல்படி ராஜூ: 14: ஸீ.ஈ.ஓ

அம்மா சொல்படி ராஜூ: (ஸீ. ஈ. ஓ) பகுதி 12: 30 10 2009

(அந்த நாளும் வந்திடாதோ!)

... நாதன் கம்பெனியும் நடந்து கொண்டிருந்தது. இதிலும் இன்கம்டாக்ஸ் ஆஃபீஸ் வேலையை என் அப்பா விடவில்லை. குமாஸ்தா ஆராவமுது இருந்து கொண்டிருந்தார். (அடித்தல் திருத்தல்) என்னை ஊருக்கு கொண்டு விடுவதென்றால், அவர் தான் கொண்டு விடுவார். இதோடு நிற்கவில்லை. என் அப்பா ரோடு கண்டார்க்ட் எடுத்தார். தவிற நம் ஆசாரியர் ஒரு முக்கூர் ஆண்டவன் என்கிறவரை என் அப்பா அவரை அரியக்குடியில் ஒரு வருஷத்திற்கு மேலாக வைத்து காலக்ஷேபங்கள் நடத்தினார். நான் ஐந்தாவது பிரஸவத்திற்கு வந்த சமயத்தில் என் பெரிய நாத்த்னார் பெண்ணுக்கு கல்யாணம். அதற்கு நிறை மாஸத்தோடு போய்விட்டு வந்து ஒரு வாரத்தில் எனக்குப் பிள்ளை பிறந்தது. ஆனால் பிள்ளைகள் மூன்று, பெண்கள் அப்போது இரண்டு தான் ? பிரஸவம் ஆகி, மூன்று மாஸம் ஆனதும் நான் உசிலம்பட்டி போய்விட்டேன். இப்படி இருக்கும்போது என் புருஷனை மதுரைக்கு மாத்தலாகி இருந்தது. அவர் மதுரையில் இருந்தார். நான் மாத்திரம் குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாக இருந்தேன். அப்போது என் பெரிய பையனை வரும்படி என் புருஷன் தஞ்சாவூருக்கு லட்டர் போட்டு வந்து விட்டான். அவரும் இல்லாத சமயத்தில் என் ஐந்தாவது பையனுக்கு வயது ஐந்து இருக்கும். அப்போது குழந்தைகளுக்கு ஏதாவது தின்பதற்கு வேணும் என்று தட்டை என்ற பக்ஷணம் செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் என் புருஷனுடைய ஆஃபீஸ்காரர் விஸ்வநாத பிள்ளை என்கிறவரும் சுப்பையா என்கிறவரும் வாசலில் வந்து உட்கார்ந்து கொள்வார்கள். என் ஐந்தாவது பையன் அவர்களுக்கு தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பான். ஆனால் அவன் ரொம்பவும் விஷமம் ஜாஸ்தி. பாத்திரம் எல்லாம் கிணற்றில் போட்டு விடுவான். அவ்வளவு விஷமம். நான் பக்ஷணம் செய்யும்போது அடுப்பில் எண்ணையில் போட்டு எடுக்கும்போது என் கையில் இருக்கும் துடுப்பைத் தட்டிவிட்டான். அந்த எண்ணைய் அப்படியே அவன் உடம்பில் ஒரு பாகத்தில் கொட்டிவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால், அந்த சமயம் அந்த ஆஃபீஸர் இருவரும் வாசலில் இருந்தார்கள். அவர்களுக்கும் பக்ஷணம் அவனே கொண்டு கொடுத்து வந்தான். என் தோளைப் பிடித்தான். அப்போது அவன் உடம்பில் எண்ணைய் கொட்டிவிட்டது. ஆனால் என் புருஷனுக்குத் தெரியாது. மதுரைப்பக்கம் கள்ளர் ரெக்ளமேஷனில் கோவப்ரேட்டிவ் இன்ஸ்பெக்டர் ஆக இருந்தார். அதனால் போலீஸ் கான்ஸ்டேபிள் ஹேட் உள்பட எனக்குத் துணை வைத்து விட்டுத் தான் என் புருஷன் மதுரை போனார். ஆனால், அவருக்கு குழந்தை பையனுக்கு எண்ணைய் கொட்டினது தெரியாது. அவருடைய ஆஃபீஸர் யாரோ சொல்லிவிட்டார். அவர் பையனை நான் பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லி வரவில்லை.65 ஆனால் அந்த ஆஃபீஸர்களும், ப்யூன் பெரியாண்டியும்66 சேர்ந்து ஆஸ்பத்திரிக்குப் போய் உடம்பில் கட்டுப் போட்டுக்கொண்டு வந்து விட்டார்கள். எனக்கு பயமாக இருந்தது. என்ன செய்வது. ஆனால் அன்று ராத்திரி பூராவும் பியூன் பெரியாண்டியும், மற்ற கிராமத்து கள்ளர்களும் விசிறிக்கொண்டும் இருந்தார்கள். 67 மறு நாள் காலையில் என் புருஷன் வந்து விட்டார். அவருக்கும் என்ன செய்வது என்று கவலையாக இருந்தது. மாத்தலாகி இருக்கிறதே என்று சாமான்கள் எல்லாம் பாக் செய்து இருந்தேன். ஆனால் என் புருஷன் கணக்குகள் பார்ப்பதற்கு என்று ஒரு தெலுங்கு அய்யர் இருந்தார். அவர்கள் வீட்டில் (இருந்து) தான் எங்களுக்கு சாப்பாடு வரும். பிறகு நான் என் புருஷனிடம் சொன்னேன். கவலைப் படவேண்டாம். என் அப்பாவிற்கு தந்தி கொடுங்கள். யாராவது வந்து என்னை அழைத்துப் போவார்கள். அதன்படி செய்யுங்கள் என்று சொன்னதின் பேரில் தந்தி கொடுத்துவிட்டார். ஆனால் என் அப்பா வீட்டில் என்ன ஆச்சரியம் என்றால் என் அக்கா தனியாகத்தான் இருந்தாள். அவளுக்கு ஐந்து பெண்களுக்கு பிறகு அபூர்வமாக பிள்ளை பிறந்து இருக்கிறது. புண்யாவசனம்68 செய்கிறார்கள். அதற்கு மாப்பிள்ளைக்கு வேஷ்டி வாங்கிக்கொண்டு அங்கு போயிருக்கிறார்கள். அந்த சமயத்தில் நாங்கள் கொடுத்த தந்தி போயிருக்கிறது. அப்போது அப்பா வீட்டில் இருந்திருக்கிறார். அவர் உடனே என் அம்மாவையும், ஆராவமுது என்கிற குமாஸ்தாவையும் அனுப்பி வைத்தார். என் தம்பிக்கு இரண்டாவது குழந்தை எட்டு மாஸத்தில் பிறந்து போயிற்று. என் அம்மாவுடன் நான் குழந்தையையும், மற்ற குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு காரைக்குடி வந்தேன். வந்தால் ஆத்தில் ஒருவரும் இல்லை. நான் இந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு அக்கா வீட்டிற்குப் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். இது அக்காவிற்குத் தெரிந்து (தால்) பரவாயில்லை. அவனை அழைத்து வாருங்கள் என்று சொன்னதின் பேரில் அக்கா வீட்டிற்குப் போனேன். நான் மாடியில் வைத்துக்கொண்டேன். மறுநாள் காலை என் அப்பா வீட்டிற்கு வந்தேன். உடனே என் அப்பா டாக்டரை ஆத்திற்கு வரும்படி செய்து வீட்டிலேயே அவனுக்கு ட்ரீட்மெண்ட் நடந்தது. ஆனால், கைவிரல் எல்லாம் ஒன்றாகப்போய்விட்டது. பிறகு டாக்டர் கைவிரல்களை கட் பண்ணி நன்றாக ஆகிவிட்டது. ஆனால் எண்ணைய் கொட்டின தழும்பு மாறவில்லை. என்ன செய்வது என்று டாக்டரை கேட்டோம். அவர் சமுத்திரத்தில் இருக்கு சோழியை எலுமிச்சம்பழச்சாற்றில் தேய்த்துத் தடவச்சொன்னார். 69 அதே போல் தடவி வந்தேன். மதுரையில் வீடு பார்த்து உன்னையும், குழந்தைகளையும் அழைத்துப் போகிறேன் (என்று) என் புருஷன் எனக்கும் என் அப்பாவிற்கும் லட்டர் போட்டார். ஆனால், மதுரை டவுனில் வீடு கிடைக்கவில்லை. டவுனைத் தள்ளி ஷெனாய் நகர் ஒரு காலனியில் தனி வீடு பார்த்து விட்டது. உங்கள் பெண்ணையும், குழந்தைகளையும் அனுப்பி வைக்கவும். பெரிய பையனை தஞ்சாவூர் யார் போகிறார்களோ அவர்களோடு என் தங்கை வீட்டில் கொண்டுவிடச் சொல்லவும் என்று என் புருஷன் லட்ட்ர் போட்டு விட்டார். பிறகு அப்பா என் செய்வார். ஆராவமுதுவோட என் அம்மாவையும் என்னோடு மதுரைக்கு அனுப்பி வைத்தார். அங்கு கொஞ்சநாள் இருந்துவிட்டு, மறுபடியும் செக்காணூரணிக்கு என் புருஷனை மாத்திவிட்டார்கள். அதனால் நாங்கள் அங்கு கொஞ்சநாள் இருந்தோம். 6 மாசம் ஆனதும், என் புருஷனை உசிலம்பட்டிக்கு மாத்திவிட்டார்கள். அங்கு இருந்தோம். அப்போது என் ஐந்தாவது பிள்ளைக்கு ஐந்து வயது இருக்கும். அப்போது ஆறாவது உண்டாயிருந்தேன். அப்போது என் அக்காவிடைய புருஷன் சைக்கிள் கடை நஷ்டமாகி விட்டது. அதனால், அவருடைய சொத்திற்குக் கட்டவேண்டிய கடனை கட்டிவிட்டு அவருக்கு செளகரியம் செய்தார் (என் அப்பா). சைக்கிள் கடையை வித்து விட்டார். ஆனால் என்ன செய்தார் என்றால், மாப்பிள்ளையுடைய நிலத்தில் வரும் அரிசியை தான் வாங்கிக் கொண்டு அதற்குள்ள பணத்தையும் மற்ற அரிசியை வித்து பணமாக ப்யாங்கில் போட்டார். அக்காவிற்கு சாப்பாட்டிற்கு அரிசி கொடுப்பார். இப்படியெல்லாம் பெண்களுக்கு உதவி செய்வார் 70

65. !

66. உசிலம்பட்டிலே பெரியாண்டி, செக்காணூரணீயிலே மாயாண்டி. பேருக்குத்தான் ப்யூன். இருவருமே ‘எங்கிருந்தோ வந்தானின்’ இனம். எங்கள் குடும்பம் இவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. இருபது வருடங்களுக்கு பிறகு மதுரைக்கு போன சமயம், இவர்களையும், என் மெய்க்காப்பாளர் ரவணப்பனையும் (ஹெட் கான்ஸ்டபிள்: வேங்கையை சுட்டவர்: என்னை காங்கிரஸ் மீட்டிங்க் போகவிடாமல் தடுப்பது அவர் கடன்.) ஹெட்மாஸ்டர் யாகூப்கான் அவர்களையும், மரியாதை நிமித்தம் பார்த்துவிட்டு வந்தேன். மேலதிகாரிகள் என்னை பவ்யமாக விளித்ததும், மாயாண்டியும், பெரியாண்டியும் உரிமையுடன் ஒருமையில் விளித்ததும், படா தமாஷ்.

67. பிரமலைக்கள்ளர்களின் உயர்பண்புகளுக்கு இணையில்லை, மனித நாகரீகத்தில்.

68. குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா.

69. கீதா, கமலம், சுகுமார்ன் நோக்குக.

70. தாத்தா ஒரு ஸீ.ஈ.ஓ.

(ஸீ. ஈ. ஓ)

No comments:

Post a Comment