Wednesday, November 4, 2009

அம்மா சொல்படி ராஜூ: 19: டோனாவூர்

அம்மா சொல்படி ராஜூ: (‘டோனாவூர்’) பகுதி 19: 4 11 2009

(‘ ...’)

திரை போட்டு விட்டார்கள் ... ஆனால், அவன் போவதற்கு முதல் நாள் பகலில் என் மாமனாரும், என் அம்மா, என் மாமா எல்லாரும் வந்தார்கள். அவர்களும் வருத்தப்பட்டார்கள். மற்ற குழந்தைகளை உயிரோடு வீட்டிற்கு அழைத்து வந்தால் போதும் என்றாகிவிட்டது. பிறகு ஒரு மாஸமாகி இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றி வீடு வந்தோம். ஆனால் இருவரும் ஸ்கூல் போகவில்லை. பெண்கள் மாத்திரம் ஸ்கூல் போனார்கள். ஆறாவது பெண்ணுக்கும் அப்போது நாலு வயது. பிறகு கொஞ்சநாள் ஏதோ செளகரியமாக இருந்தோம். இருந்தாலும் கஷ்டம் தான். என்ன செய்வது. இப்படியிருக்கும் போது (at Pudukkottai) வீட்டில் இருப்பவர்கள் வாடகை அனுப்பமாட்டார்கள். ஆனால் சின்ன வீட்டிலும் குடி வைத்தோம். அவர்களும் வாடகை சரியாக தர மாட்டார்கள். நாங்கள் குழந்தைகளை ஆஸ்பத்திரியில் சேர்த்துப் பணக்கஷ்டப்பட்டோம். அப்போது என் அப்பா தான் 1000 ரூபாய் அனுப்பி வைத்து அம்மாவை கொஞ்சநாள் வைத்துக்கொள் என்று சொன்னதின் பேரில் என் அம்மா ஒரு மாஸம் இருந்தாள். அதே போல் மாமனாரும் ஒரு மாஸம் ஆனதும் இன்னம்பூர் போய் விட்டார். அவர் பிடிவாதக்காரர். என்ன (செய்வது?)

இப்படியிருக்கும் போது கொஞ்சநாள் ஆனதும் நாலாவதாக ஒரு பெண் (கமலா) இருந்தாள். அவள் தான் ஐக்கெளண்ட் (ஹை க்ரவுண்ட்) போய் குடிக்கத் தண்ணீர் கொண்டு வருவாள். அப்படி ஒரு நாள் குடத்தோடு தண்ணியை வைத்து விட்டு ‘அம்மா தலை வலிக்கறது’ என்று சொன்னாள். சரி பார்க்கலாம் என்று இருந்தேன். ராத்திரி நல்ல ஜுரம் வந்தது. என் புருஷன் க்யாம்பு (கேம்ப்) போய் விட்டு வந்தார். அன்று ராத்திரி ஒரு மணி அளவில் நினைவு இல்லாமல் உளறி விட்டாள். (என் ஞாபகம்: கண் தெரியவில்லை என்று சொன்னாள்.) ஜுரம் கொஞ்சம் குறைந்தது. ஆகாரம் பாலாடையால் தான் (கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் நேட்டிவ் ஃபீடிங்க் பாட்டில்) பால் போட்டுவேன். அப்போது ஒரு சத்தம் போடுவாள். அவ்வளவு தான். பிறகு நினைவு இல்லாமல் வீட்டில் ஒரு நாள் வைத்திருந்தோம். ஒரு வைத்தியமும் செய்ய முடியவில்லை. பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியில் பெண்களை சேர்ப்பதில்லை என்று சொல்லி விட்டார்கள். ரொம்பவும் எங்களுக்கு கவலையாக போய்விட்டது. பிறகு என் புருஷன் ஆஃபீஸில் வேலை பார்ப்பவர் ஒருவர் வந்து, நான் கார் தருகிறேன். எங்கு வைத்தியம் செய்யவேண்டுமோ அங்கு போய் செய்யுங்கள். இது முக்யம் என்று அவர் சொன்னார். அந்த சமயம் தெய்வநாயகம் பிள்ளையும் வந்து விட்டார். பையன் போய் 4 மாஸம் கூட ஆகவில்லை. பெண்ணுக்கு ஜுரம் வந்து விட்டது. அந்த சமயத்தில் தான் பெரிய பெண் (ஜெம்பகம்) புஷ்பவதியானாள். என்ன செய்வது? அதற்குள் தெய்வநாயகம் பிள்ளை சொன்னார். ‘பக்கத்தில் டோனாவூர் என்று ஒரு ஆஸ்பத்திரி இருக்கிறது. அங்கு குழந்தையைச் சேர்க்கலாம்’ என்று சொன்னார். கார் ஒருத்தர் கொடுத்தார். அதில் மாடியிலிருந்து நாலு பேராக காரில் வைத்துக்கொண்டு டோனாவூர் போனோம். (கமலா, ‘கார் டிக்கியில் என்னைப் போட்டு சென்றதாக ஞாபகம்’ என்கிறாள்.) ஆனால் டாக்டர் ஸீரியஸ் என்று சொல்லிவிட்டார். என்னவோ பெருமாள் துணை (பிறகு இந்த வாக்கியத்தை எழுதிருக்கிறார், ருக்மிணி.) சமையல் பாத்திரம் எல்லாம் எடுத்துப் போனோம். வீட்டில் மூன்றாவது பையனும், பெரிய பெண். ஆறாவது பெண் எல்லாரும் வீட்டில் இருந்தார்கள். நாங்கள் டோனாவூருக்குப் போனோம். நாங்கள் வெளி வராந்தாவில் உட்கார்ந்திருந்தோம். தெய்வநாயகம் பிள்ளை எங்களுடன் வந்தார். உள்ளேயிருந்து ஒரு பெரிய டாக்டர் வந்தார். குழந்தையைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் போய் விட்டார். எங்களுக்கு கவலையாகப் போய்விட்டது. 6 மணி வரையில் உட்கார்ந்திருந்தோம். பிறகு ஒரு டாக்டர் வந்து உங்களுக்கு ரூம் கிடைத்து விட்டது. அங்கு போய் இருங்கள். நாளை தான் டாக்டர் வருவார் என்று சொல்லி விட்டு போய் விட்டார். நாங்கள் அந்த ரூமுக்குப்போனோம். அது வரையில் தெய்வநாயகம் பிள்ளை இருந்தார். திடீரென்று ஒரு டாக்டர் வந்து பார்த்து விட்டு, நாளை முதல் டீஸ்மெண்ட் (ட்ரீட்மெண்ட்) பார்க்கலாம் என்று சொல்லிவிட்டுப் போனார். அன்று ராத்திரி நல்லபோது ஆகப்போச்சு...

(‘டோனாவூர்’)

No comments:

Post a Comment