Wednesday, November 4, 2009

அம்மா சொல்படி ராஜூ: ருக்மிணி கல்யாணம்

அம்மா சொல்படி ராஜூ: பகுதி 7: 23 10 2009

(என்னடாது ...!)

கடைசியில் மாப்பிள்ளை வந்துவிட்டார்31. நிற்க. 32

மாப்பிள்ளையோடு தம்பிக்கும்33 பூணூல் போட்டார்கள். ஆனால் இதில் ஆச்சரியம் (என்ன) என்றால் என்னுடைய அக்கா இந்த சமயம் மூன்றாவது குழந்தை உண்டாயிருந்தாள். ஆனால், எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்தாள்.அவளுடைய புருஷன் ஒரு மாதிரியான குணம்.34 பிறந்தவீட்டுக்கு அனுப்பமாட்டார். இதில் என் கல்யாணம் என்று தெரிந்த உடன், அக்காவை அவருடைய அம்மா வீட்டிற்கு கொண்டு போய் விட்டார். அவள் வராமல் எப்படிக் கல்யாணம் நடப்பது என்று என் அப்பாவிற்கு (கவலை). வெள்ளை தோடு, பட்டுப்புடவை, என் அத்திம்பேருக்கு வேஷ்டி, வெள்ளிச்சொம்பு, குளவாத்திரம்35 எல்லாம் செய்து, என் அப்பாவுடைய பெரியப்பா பிள்ளையை போய் என் அக்காவை அழைத்து வரும்படி என் அப்பா அவரை அனுப்பி வைத்தார். ஆனால், என் அக்கா வந்தது எப்போது என்றால் எனக்கு கழுத்தில் தாலி கட்டின சமயம். எட்டிப்பார்த்து விட்டு உடனே அக்கா அரியக்குடிக்கு போய்விட்டாள். என் கல்யாணத்திற்கு சொந்த மனுஷ்யர்கள் யாரும் இல்லை. ஆனால், புதுக்கோட்டையில் என் அப்பாவுடைய பெரியப்பா பெண்36 ஒருத்தி இருந்து கல்யாணத்தை நடத்தி வைத்தாள். ஆனால், கல்யாணம் ரொம்ப நன்றாக நடந்தது. எல்லாம் முடிந்து என்னை மாமியார் அழைத்துப் போனார். நானும் பயப்படாமல் போனேன்.

31. அப்பா ஆணழகன். கட்டுக்குடுமி. சிவந்த மேனி.. கட்டு மஸ்து . இளகிய மனது.. பட்டப்பா என்று உகந்த செல்லப்பெயர். ‘சட்’னு கோபம் வந்துடும். அவரது போஃட்டோக்களை பதிவு செய்து இருக்கிறேன்.

32. நிற்கறதாவாது! உப செய்திகள்:

ü முகூர்த்த்தின் போது, சிறுமியான ருக்மிணி, புரோகிதர் சொல்லுக்கு கட்டுப்படாமல் வேடிக்கைப் பார்க்க, கோபத்துடன், அப்பா அவரைத்தூக்கி வைத்தாராம். தாத்தா அதிர்ந்துவிட்டாராம்.!

ü பஸ் லேட்! அப்பா குதியா குதிச்சாராம்! வி..ஐ.பி. கெஸ்ட் அக்னிஹோத்ரம் ஸ்ரீ இராமானுஜ தாத்தாச்சாரியர் எங்கிட்டெ சொன்னார். ’’அவனுக்கு அப்பா கிட்ட பயம். அவருக்கு சம்பந்திட்ட பேச லஜ்ஜை. சம்பந்திக்கு நிஜமான கவலை. குறுக்கெ நெடுக்கெ ஓடின கிருஷ்ணன் தூது நான்.” ஆச்சாரியன் சார்பிலே வந்திருந்தாலும், மாப்பிள்ளை தோழன் மாதிரி.. அவரும் பால்யம் தானே!

ü சின்ன அத்தை குட்டிப்பொண்ணு. ஏதோ விஷமம். அம்மாவோட அப்பா ஒரு குட்டு குட்டிப்பிட்டார். அவ பண்ண ஆகாத்தியம் தாங்காம, அவர் மன்னிப்பு கேட்டாராம். தாத்தா கேட்ட முதல் & கடைசி மன்னிப்பு அதுவா தான் இருந்திருக்கும்.

ü

.

33. அண்ணனுக்கு தம்பி, முன்கோபத்தில் ஒரு படி மேல். ரோஷத்தில் இரண்டு படி. படிப்பை உதறி,ட்டு தன் வாழ்க்கையை பிற்காலம் திறம்பட அமைத்து செல்வம் சேர்த்தார், புனே சென்று . என்னை வாஞ்சையுடன் வளர்த்தவர். தோளில் சுமந்து, வித்யாரம்பம் செய்தவர், செக்கானூரணியில். நன்றாக பாடம் சொல்லிக்கொடுப்பார். இவர் தூண்ட, கொங்கணேஸ்வரர் வித்யாசாலையின் பாலு சார் சொல்லிக்கொடுத்தபடி. ஏழு வயதில், தஞ்சை திலகர் மைதானத்தில் பொதுமேடை ஏறினேன், பாரதியார் புகழ் பாட.. பாரதியின் பகவத் கீதை பரிசு. இன்றும் பொக்கிஷமாக வைத்து இருக்கிறேன். ஓரளவு தொடர்பு இருக்கிறது, சந்ததியுடன்.

34. முசுடு என்று பொருள் கொள்க. ஆனால், யாவரையும் கவர்ந்து விடுவார். சுயநலம் அறவே கிடையாது.. என் தந்தை அவரை கண்டு ஓடி ஒளிவார். ஏனென்றால், நடுத்தெருவில் அவரிடம் மாட்டிக்கொண்டால், எதிரில் உள்ளவரின் சட்டை பொத்தானைப் பிடித்துக்கொண்டு, சில மணி நேரங்கள், யோகக்ஷேமம் விசாரிப்பார். வண்டிகள் ஓரம் கட்டும். ஹிட்லர், நம்மாழ்வார், ஃபோர்ட் கார், கறிகாய் விலை: எல்லாரும் வருவார்கள். அவர் ரேஞ்ச் அப்படி. எங்கள் பெரியண்ணாவுக்கு இணை அவரே.

35. வைஷ்ணவ டம்ளர்.

36. பின்னணியும் முன்னணியும், பிறகு.

(ருக்மிணி கல்யாணம் வைபோகமே!)

No comments:

Post a Comment