Tuesday, March 26, 2013

‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’




‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’
1 message

Innamburan S.Soundararajan Tue, Mar 26, 2013 at 6:32 PM
To: mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com





‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’
Inline image 1



நமது இந்தியாவில் பல மாற்றங்கள் ஏற்படப்போவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன. தேசிய தேர்தல் இந்த வருடமே நடந்தாலும், நடக்கலாம். தற்காலத்திய ‘அரசியல்’ கட்சிகள் சுயமுன்னேற்ற முஸ்தீபுகளை கனஜோராக துவக்கி விட்டன. இத்தருணம், பொது ஜனம் சுதாரித்துக்கொண்டு, தேசாபிமானமும், சமுதாயம் ஓங்கி வளர்வதும், மக்களின் சுய முன்னேற்றமும்  ஒன்றுக்கொன்று முரண் இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்டு இயங்கினால், நாடு பிழைக்கும்; சமுதாயம் செழிக்கும்; தனி நபர்களுக்கும் நல்ல காலம் பிறக்கலாம். முந்திய பதிவு ஒரு பீடிகை மட்டுமே, ஒரு கல்லை விட்டெறிந்து.
பொது ஜனம் என்ற மாபெரும் சமூகத்தில் அங்கத்தினர்களான தனி நபர்கள் ஒவ்வொருவரும் சேவை செய்யவேண்டிய அத்யாவசியத்தை அடிகோடிட்டு கூறவும் வேண்டும். அதனுள் கல்லுக்குள் தேரையாக உறையும் சுயமுன்னேற்றத்தைத் தெளிவுபட எடுத்துக்கூறவும்  வேண்டும்.  ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்ற பொன்வாக்கு ஒரு கைவிளக்கு.  நமது நினைவலைகள் மறக்காத விடுதலை வேள்வி வீரர்களின் வரலாற்றை வாக்களிக்கப்போகும் இளைய/முதிய சமுதாயத்துக்கு எடுத்துக்கூறுவதால் மூன்று ஆதாயங்கள். 
~ நாட்டுப்பற்று பற்றிக்கொள்ளும்.
~ படிப்பினைகள் விழிப்புணர்ச்சியை தூண்டும்.
~ வாக்காளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள கிட்டும் ஒவ்வொரு வாய்ப்பும், ஜனநாயகத்துக்கு இடும் உரம்.
அவரவரது ஊர்களிலும், பேட்டைகளிலும் தோன்றி, மறைந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் பணி, தியாகம், பட்ட துன்பங்கள், எதிர்ப்புக்கள், சந்தித்த இன்னல்கள், சிறை வாசம் ஆகியவை தான் நமக்கு அஸ்திவாரம். அதை பராமரிக்காமல் இருந்து விட்டோம்.  நாளொரு அவமானமும், பொழுதொரு பொய்யும், புனைசுருட்டுமாக, பாரத விலாசம் என்ற உப்பரிகையை உடைத்து வருகின்றன என்று தேம்பி அழுவதுடன் நிற்காமல், நாம் ஒவ்வொருவரும் ஆக்கப்பூர்வமாக இயங்க முடியும். உதாரணமாக, மஹாகவி பாரதியார் சொன்னதை சற்றே காது கொடுத்துக் கேட்போம்.

“வந்தே மாதரம் என்போம் எங்கள் மானிட தாயை வணங்குதும் என்போம்” என்று அடியெடுத்துக் கொடுத்தார். பெற்ற தாயை அனவரதமும் வணங்கும் போது, பொய் பேச மனம் வருமா?

“வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே“ என்று ஜயபேரிகையை,இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு பல்லாண்டுகள் முன்பே, முழங்கினார். அதை மறந்து விட்டு, ஏன் இந்த ஒப்பாரி பாடும் ஆயாசம், நமக்கு? 

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே”  என்று, அடக்குமுறை பேயாட்டம் ஆடிய காலத்திலேயே, துணிச்சலுடன் சூளுரைத்தார். சுதந்திர இந்தியாவில் நடக்கும் அக்கிரமங்களை தட்டிக்கேட்க ஊடகங்கள் தயங்குகின்றன. அத்தனை பீதியா, நமக்கு?

~ நனவின் பிரதிபலிப்பாக, “வெள்ளி பனி மலையின் மீது உலாவுவோம் - அடிமேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்”என்று என்றோ ஒரு நாள் கனவு கண்டார். ஹெலிகாப்டர் ஊழல், நீர்மூழ்கிக்கப்பல் ஊழல், வான் அலை வரிசை ஊழல், மண்ணுள் எண்ணெய் ஊழல் என்று எங்கெங்கும் பேச்சு. கண்ணியமான தீர்வு நாட மக்களுக்கு பீதி. நாம் இதை மாற்றவேண்டாமோ?
அவருடைய தீர்க்கதரிசனங்களை வைத்தே நாம் பாரதமாதாவின் ரக்ஷனை செய்யலாம். 
எனினும் இத்துடன், இரு காரணங்களுக்காக, இப்போதைக்கு நிறுத்துகிறேன். நான் பின்னூட்டம் கேட்க வில்லை. சான்றோர்கள் ஆக்கப்பூர்வமாக எது சொன்னாலும், கேட்டு பயன் பெற விரும்புகிறேன். இரண்டாவதாக, உங்கள் ஒவ்வொருவரிடமும் தாழ்மையுடன் ஒரு கேள்வி. நம் நாட்டில் கல்வி செழிக்க, நீங்கள் தனி நபராக என்ன செய்யப்போகிறீர்கள்/
பிற பின்னர்.
அன்புடன்,
இன்னம்பூரான்
26 03 2013

*
முந்திய பதிவு.
‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ {1} 


தேசாபிமானமும், சமுதாயம் ஓங்கி வளர்வதும், சுய முன்னேற்றமும்  ஒன்றுக்கொன்று முரண் இல்லை என்பது உறுதி. அவை ஒட்டு -மாங்கனிகள். தற்கால இந்தியாவில் தேசாபிமானத்துக்குப் போட்டியாக பிரிவினை வாதங்கள் வலுத்து வருகின்றன, மொழி வாரியாகவும், மற்றபடியும் நாட்டை கூறு போட்ட பின்னும். சமுதாயம் மங்கி தேய்ந்து வருகிறது. துண்டாட்டம் கொண்டாட்டமாக நிகழ்ந்து வருகிறது. மாநிலங்கள் தோறும் ‘அன்னியர்கள்’ சிதற்தேங்காய். பொறுக்கி தின்பவர்கள் நிழல் மனிதர்கள். பினாமி-பேமானி, ரவுடி-கேடி ஆகியோர் பரிபாலனத்தின் மீது கை வைத்து விட்டனர். ஏழை-பாழை, தலித் போன்ற நசுக்கப்பட்டோர் சுயமுன்னேற்றம் நாடுவதிலிருந்து வழி மறிக்கப்படுகிறார்கள். இந்த சூழலும் நாட்டுப்பற்றை அடகு வைப்பதும், சமுதாய இழப்புகளும், சுயநலமும் ஒன்றுக்கொன்று முரண் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, பாரத தேசமென்று பெயர்சொல்லப்படும் நம் நாட்டை போற்றி, மனித நேயம் என்ற உரமிட்டு, மக்கள் நலனை காப்பாற்றி, அந்த அடித்தளங்களின் நல்வரவாக அவரவர் தனக்கு மேன்மை நாடமுடியும், அதற்கு மக்கள் தொகை முழுதும் மெனக்கடவேண்டும் என்று உரைக்கவே, இந்தத்தொடர்.

இப்போதெல்லாம் இந்தியா வெளிநாடு ஊடகங்களில் தினந்தோறும் இருவகையில் பேசப்படுகிறது. 1. பல துறைகளில் இந்திய தனிமனிதர்களின் அபார சாதனை. 2. போகிறப்போக்கைப்பார்த்தால் இந்தியா உருப்படுமா? என்ற ஐயம். அந்த அலசல்களை, குறிப்பாக நடுவுநிலையுடன் அக்கரையுடன் எழுதப்பட்டவை நாம் உன்னிப்பாக படிப்பது நலம் பயக்கும். மார்ச் 23, 2013 இதழில் லண்டன் எகானமிஸ்ட் இந்தியாவை பற்றி மூன்று கட்டுரைகள் உளன. அவற்றில் ஒன்றை பற்றி, இன்று பேச்சு.

ஆங்கிலேய கலோனிய ஆட்சி நம்மை சுரண்டுவதற்கு முன் பாரத வர்ஷத்தில் சுபிக்ஷம் நிலவியது என்பார்கள், ஒரு சாரார். தாதாபாய் நெளரோஜி அவர்கள் இந்திய ஏழ்மை பற்றி எழுதிய வியாசம் இன்றைக்கு அப்பட்டமாக பொருந்தும். அதிகப்படியாகவே. ஏனெனில், இங்கு தற்காலம் இரு ஆளுமைகள். அரசு பட்ஜெட்டுக்களும்,  நிழல் மனிதர்களின் கறுப்புப்பணமும். 2010 வருடம் உலக வங்கி செய்த 151 நாடுகளில் செய்த ஆய்வுப்படி, இந்தியாவின் கறுப்பு பட்ஜெட், வெள்ளை பட்ஜெட்டின் ஐந்தில் ஒரு பாகம். அரசின் வெள்ளை பட்ஜெட்டுக்கு எந்த அளவு கறுப்பின் பரிமாணம் தெரியும் என்பது மர்மமாக இருப்பதால், கறுப்பின் வியாபகம் மிக அதிகம் என்று தான் ோன்றுகிறது. செல்வம் கொழிக்கும் நாடுகளிலும் கறுப்பு விளையாடுகிறது. இந்த அளவு இல்லை. மற்ற பேத்துமாத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், நிலைமை படு மோசம். 1980க்கு பிறகு லஞ்சலாவண்யம் பெருவாரி வியாதியாகிவிட்டது.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 42,800 பேர்கள் தான் வருமானம் காட்டி வரி செலுத்துகிறார்கள் என்கிறார் நிதி அமைச்சர், கேலி செய்தவாறு. நாடு அழுகிறது, இந்தப் பித்தலாட்டத்தைக்கண்டு. வருமான வரி கட்டும் அசடுகள் 2.5%. வரவேண்டியதில் மூன்றில் ஒரு பங்கு கூட வரி வசூல் ஆவதில்லை என்கிறார்கள், ஆய்வாளர்கள். அடுத்தபடியாக, கோடானுகோடி ரூபாய்கள், வீடு, மனை, பொன் ஆகியவற்றில். வரவு/செலவு எல்லாம் காசு. அது முழுங்குவது நாட்டின் செல்வநிலையில் 14%. ‘ஸ்விஸ்’ என்ற சொல் வெளி நாடுகளில் நம் செல்வத்தை பதுக்குவதைப் பற்றி. கறுப்பப்பண ஓடை மாரிஷியஸ் வழியாக, பெருக்கெடுத்து ஓடுகிறது. கிட்டத்தட்ட பூண்டியாகி விட்ட அரசு, கறுப்புப்பணத்தை மீட்ட முஸ்தீபுகளை தொடுங்குகிறது என்று அந்த கட்டுரை சொல்கிறது. அரசியல் வாதிகளுக்குத்தான் கறுப்புப்பண மோகம் என்பதையும் சொல்ல, அது மறக்கவில்லை. இத்தனை எழுதுவதின் பின்னணி: மார்ச் 13 அன்று நாகபூஷணம் என்ற இதழ் ஒரு ஒற்றன் வேலை செய்து மூன்று பிரபல வங்கிகளில் சட்ட விரோதமான பணமாற்றம் நடப்பதை ஊதி விட்ட நிகழ்வு.

என் கருத்து:
“ அரவம் தீண்டியது கறுப்பையோ, அதன் நிழலையோ அல்ல. நிழலின் நிழலை படம் பிடித்தது. இதெல்லாம் பல நாள் கூத்து. தமிழில் ‘வேலியே பயிரை மேய்ந்தது’ என்ற உவமை உண்டு. இங்கு கொட்டை போட்டவர்கள் அதை செய்கிறார்களாம்.”.
படித்த கட்டுரை:

No comments:

Post a Comment