Wednesday, May 15, 2013

இன்னம்பூரான் பக்கம் ~ 17


இன்னம்பூரான் பக்கம் ~ 17

“ என் சொல்லை கேட்பீரானால், சாக்ரட்டீஸை புறம் தள்ளி, உண்மையை நாடுவீர்கள்.”
Socrates-new

- சாக்ரடீஸ்
‘…இந்த நிழலுலகம் அவர்களுக்கு நிதரிசன உலகு. மற்றதெல்லாம் மாயை…நிழலை மறந்து அசலை அனுபவிக்கிறான்…அடித்துப்பிடித்துக்கொண்டு சகபாடிகளை உய்விக்க ஓடோடி வருகிறான்…அவர்களோ இவனுடைய தீர்க்க தரிசனத்தை எள்ளி நகைத்து, அவனை நாடுகடத்தவேண்டும் என்ற ஏகோபித்த முடிவுக்கு வருகிறார்கள்…’.
பக்கம் 16ன் ஈற்றடியின் ஒரு பகுதி மேலே: அன்றாட மனித வாழ்க்கையின் அனுபவங்களும், அவற்றின் பயனாகவோ/முரணாகவோ நடைந்தேறும் பழக்கவழக்கங்கள், பண்பு, பாரம்பரியம் போன்றவற்றின் தாக்கம், கலாச்சார மரபு, ‘சான்றோர்’ வாக்கு, எழுதப்படாத விதிமுறைகள், சமய கட்டுப்பாடுகள், சம்பிரதாயம் போன்றவை தான் மூளைச்சலவையின் பிரதான பிரயோகங்கள், ஆயுதங்கள், கருவிகள் என்றால், அது மிகையல்ல. அதை புரியவைக்கத்தான் ப்ளேட்டோ இந்த ‘குகை’ உருவகத்தை முன் வைத்தார். அவருடைய ஆசான் சாக்கிரட்டீஸ் ‘தார்மீகம்’ என்ற சொல்லுக்கு பொருள் நாடினார். உலகின் முதன்மை ஸ்தானம், ‘நாம் வாழவேண்டிய வாழ்நெறிக்கு மட்டும் தான்’ என்றுரைத்தார்.
தற்கால கேலி சித்திரங்களைப் போல, தொல்காப்பியரின் எட்டு மெய்ப்பாடுகளில் ஒன்றான நகைச்சுவைக்கு சுருக்கமாகவும், தெளிவாகவும் உண்மையை விளம்பும் ஆற்றலுண்டு.  அக்காலத்தில் பிரபல நாடகாசிரியராக இருந்த அரிஸ்டோஃபேன்ஸ் ( உத்தேசமாக கி.மு.448 – கி.மு.380 ) ‘மேகங்கள்’ என்ற நாடகத்தில் சாக்கிரட்டீஸ் தார்மீகம் நாடுவதை கேலி செய்வதற்கு கையாண்ட உத்தி: சாக்கிரட்டீஸ் ஒரு கூடையில் தொங்க விடப்படுகிறார். ஸ்ட் ரெப்ஸேட்ஸ் என்ற நபர் அவர் மீது ஒரு கேள்விக்கணை தொடுக்கிறார். ஏற்கனவே பிரபலமாகி விட்ட வினாமன்னர் சாக்கிரட்டீசின் கொள்கைகளை (?) மேலும் பரப்ப, அந்த நாடகம் ஏதுவாயிற்று.
சாக்ரெட்டீஸ்ஸின் கொள்கைகளை சுருக்கியளிப்பது எளிதல்ல; பொருத்தமும் இல்லை. இந்த கட்டுரைத்தொடரே அறிமுகத்தொடர் என்பதால், என்னால் இயன்றவரை அவற்றின் சாராம்சத்தை மூன்று தொடர்களில் அளிக்கிறேன். அவற்றில் யாராவது குறை காண விரும்பினால், அது நல்வரவே.
சாக்ரட்டீஸ் (கி.மு. 470~399) கிரேக்க நாட்டின் பிரதான நகரமாகிய ஏதென்ஸ்ஸின் பொற்காலத்தில் வாழ்ந்தவர். தனக்கு முந்திய தத்துவபோதனைகளை படித்து அவற்றில் இரு குறைகளை கண்டார். பல தத்துவங்களின் கலந்துகட்டியாக இருந்தன, அவை; ரசவாதமொன்றும் இல்லை, அவற்றில். ஒன்றுக்கொன்று முரணாக  அமைந்ததால், குழப்பம் தான் மிஞ்சியது என்றார். (தற்காலத்திலும் தத்துவபோதனைகளை திரட்டிப்படித்தால், தலை சுற்றுகிறது என்பீர்கள்!) மேலும், ‘பூவுலகை பற்றி அதியற்புதமான கருத்துக்கள் கூறியவர்கள், அவற்றை அலசி ஆராயவில்லையே என்று ஆதங்கப்பட்டார். அதன் விளைவு: உண்மை தென்படவில்லை. புவியிலிருந்து ஆதவன் இருக்கும் தொலைவு, அதன் பரிமாணம் போன்ற அதியற்புதமான கருத்துக்கள் அன்றாட வாழ்க்கைக்கு எப்படி உதவும் என்று வினவினார். பைத்தியத்தை சுற்றி நாலு பேர் என்றால், தத்துவ பைத்தியத்தை சுற்றி நாற்பது பேர் என்று தான் அவர் உலவி வந்தார். எங்கு சென்றாலும், ஒரு இளைஞர் பட்டாளம் சூழ, வலம் வருவார். அவருடைய அணுகுமுறைக்கு அப்படி ஒரு கவர்ச்சி. ஏதாவது ஒரு அடிப்படை கருத்துக்கு விளக்கம் கேட்டே யாவரையும் அசத்தினார்:
‘நட்பு என்றால் என்ன?’/‘தைரியம் என்றால் என்ன?’/ ‘சமயபற்று என்றால் என்ன?’/ ‘நல்லது என்றால் என்ன?’/‘சரியானது என்றால் என்ன?’/‘நியாயம் என்றால் என்ன?’ இத்யாதி. தற்கால மேல்படிப்பு ஒரு வரி விடைகள் சொல்லி தப்பிக்க முடியாது. இன்னலை தாங்கும் சக்தி தான் தைரியம் என்று பதிலளித்தால், பிடிவாதக்காரனும் அப்படித்தானே செயல்படுகிறான். அது தைரியமா? என்பார். சபையோர், ‘பழைய குருடி! கதவை திறடி!’ என்று சிந்தனையில் ஆழ்ந்து விடுவார்கள். அவருடைய இலக்கு அது தானே. ‘சிந்தனை செய் மனமே’ என்று தான் அவர் உரைத்தார்.
மாதிரிக்கு ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக்கொண்டு, நீங்கள் அலுத்துப்போகும் முன் இன்றைய கட்டுரையை முடித்து விடுகிறேன். ‘நியாயம் என்றால் என்ன?’ சாக்ரட்டீஸ், பள்ளி மாணவன் போல், சொல்லொன்றுக்கொருபொருள் என்று நாடவில்லை. சிலேடைப்பேச்சில் இறங்கவில்லை. அவர் தொணத்தி, தொணத்தி எடுத்த குறிப்புகள்: நியாயம் என்ற சொல்லை நாம் பல நிலைப்பாடுகளில், பல மக்களின் எண்ணவோட்டங்களில், பல தீர்மானங்களின் உட்பொருளை அறிவதில், சட்டதிட்டங்களின் பின்னணி நோக்குவதில், பற்பல நடவடிக்கைகளை ஆராயும் போது (தற்கால உதாரணங்கள்: விதவா விவாகம், திருநங்கை விவகாரம், தீண்டாமை விவாதம், சமய/மொழி விகாரம், அரசியல் விதண்டாவாதங்கள் இத்யாதி) பயன் படுத்துகிறோம்.  அவை யாவற்றையும் பற்றி சிந்தித்தால், நியாயத்தின் பொது இயல்பு பற்றி சில தெளிவுகள் கிடைக்கலாம் என்றார். அத்தகைய தெளிவுகளை வரவழைக்கப்பார்த்தாரே தவிர, தன் கருத்தை ஏற்க சொல்லவில்லை.
(தொடரும்)

 
பிரசுரத்திற்கு நன்றி: http://www.atheetham.com/?p=4851

சித்திரத்துக்கு நன்றி: http://1.bp.blogspot.com/-Qm85i9mL5TU/UJeuTbLdaSI/AAAAAAAAADc/1i2P06boMQs/s1600/Socrates-new.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment