Sunday, May 26, 2013

தெருக்கூத்து -2


தெருக்கூத்து -2

Innamburan S.Soundararajan Sun, May 26, 2013 at 4:59 PM

தெருக்கூத்து -2
‘நவீன சகுனி’
Inline image 1


இரண்டாவது நாள். மன்னார் சாமி புண்ணியத்திலே மின்சாரம் இருக்கிறது. அப்படியிப்படி பஜனை முடிந்து சுண்டல் வினியோகம் முடிய இரவு மணி ஒன்பது. நவீன சகுனி நல்லச்சாமி மகாதேவன் டாஸ்மெக்கிலிருந்து மீட்கெடுக்கப்பட்டாலும், அவனுடைய உளரல் நிற்கவில்லை. நேரம் ஆக, ஆக, விசில் சத்தம் இல்லாதக் கூரையை பிளந்தது. நிலைமையை கட்டுப்படுத்த, பாடிக்கொண்டே மேடையேறுகிறார், விதூஷகர் (அதான்: கோமாளி). 
‘தரும  ருருட்டிய துபகடை என்றால்
கருமத் தைவிட்டொ ழித்தது கிட்டிப்புள்ளு.
மரும கதை சொல்லவன் தேன்நானே.
அருமையாகஉ ரைத்துடுவேன் யானே.’

யாருக்கும் புரியவில்லை. பதம் பிரித்துச்சொல்ல அவருக்கும் தெரியவில்லை. கந்தசாமி காலத்திலிருந்து நெட்டுருவில் ஒரு சின்ன மாற்றம். அதுவே சிக்கல். பொருளறியாமல். விசில் சத்தம் ஏறியது. தட்டுத்தடுமாறி மேடை ஏறிய நல்லச்சாமியை கண்டு, வெற்றிகரமாக வாபஸ் வாங்கினார், விதூஷகர்.
மன்னார் சாமியைத் தவிர எல்லாச்சாமியும், நவீன தருமரு, நவீன விதுரரு, நவீன துரியோதனரு, பீமரு, நவீன கிருஷ்ணரு, (நவீன சிகண்டி:உளவு துறை) எல்லாரும்
பிச்சு ஐயரில் ஆர்மோனியம் ஒத்திசை ஒலிக்க, கூடவே மேடை ஏறிவிடவே நாடக பாணியில் சம்பாஷணை நடக்குது.

சம்பாஷனை:

கி (நவீன கிருஷ்ணரு) : தர்மம் தலை காக்கும். சூது கவ்வும். விளையாடாதே! விளையாடாதே! தர்மபுத்திரா! பந்தானாலும், பகடையானாலும், அழுகுணி ஆட்டம் ஆடுவாங்க. நீ மாட்டிக்காதே.

ச (நவீன சகுனி): ரோஷமில்லாதப் பதரே! என்னைய்யன் துரியோதன் ராசா! நான் அவனோட கூசா! நீயொரு பைசா. எனக்கு வேண்டியது கோடி ரூபா. வீசாதப் பந்துக்கு நாலு லச்சம். வீசாத மட்டைக்கு நாப்பது லச்சம். கூசாமல் பொய் சொன்னால், மெய்யாகவே உன் பொண்ணு கல்யாணத்தில் மொய் எழுதுவேன்.

அ (நவீன அர்ஜுனரு: அவரு தான் கிட்டிப்புள் வில்லாளி.) அண்ணா தருமனே! அறிவிழந்த அண்ணாவே. நான் என்ன சமத்தா காலாகாலத்திலே மாஜி வீரனானேன். கிருஷ்ணன் எனக்கு வாத்தியார். அவன் சொன்ன மாதிரி, ‘விளையாடாதே! விளையாடாதே! தர்மபுத்திரா! பந்தானாலும், பகடையானாலும், அழுகுணி ஆட்டம் ஆடுவாங்க. நீ மாட்டிக்காதே. சொல்லிப்பிட்டேன்.’ என்று பாடிக்கொண்டே, மேடையை விட்டு இறங்கி, அன்றைய தினம் மேடையில் வர தேவையில்லாததால் முன் வரிசையில் உட்கார்ந்து தாம்பூலம் தரித்துக்கொண்டிருந்த நவீன பாஞ்சாலி ஸ்த்ரீப்பார்ட் சக்ரபாணியுடன் அரட்டை அடிக்க போய்விட்டான்.

இது தான் தருணம் என்று
துச் (நவீன துச்சாதனன்) பகர்ந்ததைக் கேட்பீராக: 
‘முன் வைத்த பங்கயக் கண்ணை 
பின் வைக்க மாட்டான், துச்சு.
பகடை உருட்டி, எட்டிப்பிடிப்பான் துருபதன் மகளை.
சகடம் (தேர்) உருட்டி வாடா! கர்ணா! “
என்றான்.
நல்லிணக்க சுயோதனன் என்ற துரியோதன் வெகுண்டு கூறுவான்:

‘என்ன சொன்னாய், எங்க அப்பன் மவனே?
மன்னனல்லவோ கர்ணன் என்ற சூர்யக்குஞ்சு.
அண்ணன் யுதிஷ்டிரனை சூதிலே கவ்வு.
கண்ணன் பக்கம் பார்க்காதே, ஓரக்கண்ணால்.’

காளி மார்க் கோலிச்சோடாபுட்டிகள் வந்திடவே, நவீன அர்ச்சுனனும், நவீன பாஞ்சாலியும் மேடை ஏற, நவீன சகுனியும் கோலி அமுக்கி, ‘புஸ்’ என்று வாயுதேவனுக்கு விடுதலை அளித்து, பரிமாறினானே; ஆனந்தமாக பரிமாறினானே! ஆசுவாசங்கள் ஓய்ந்த பின்னர்,

நவீன சகுனி (தனிமொழி):
மெட்டு: கொடுமுடியாளின் ‘காந்தியோ பரம ஏழை’:
மெனெக்கெட்டு ‘முணுமுணுப்பு’ தாளத்துக்கிணங்க பாடுகிறான்.

“ யானொரு அப்பாவி! என் கைபேசியோ சொப்பு.
  போனால் போகட்டும் போடா! ஒரு கோடி
  போனால் போகட்டும் போடா! பல கோடி
  கோணாமல் வந்து விடும், பீமா! பல பீமா!”

நவீன சகுனி (உரக்க):
 “ வந்தனன்! வந்தனன்! வந்தனனே! சகுனி
   சந்தனம் பூசி, தாம்பூலம் தரித்து வந்தனனே!
   பந்து வீசாதே, எம்.ஜே. கோபாலா!
   (கா) பந்து பண்ணாதே, விஜய் ஹஜாரே!

   அம்பயரெல்லாம் என் பாக்கெட்க்குள்ளே.
   ஜம்பமெல்லாம் என் கிட்ட சாயாது.
   பிம்பமெல்லாம் பாரு! என் கைக்குள்ளே.
   கொம்பனாருக்கெல்லாம் கொம்பே! நரிக்கொம்பே!”

   
ஓடி வந்த சிகண்டி சீபீஐ ரிப்போர்ட் வாசித்தான். நடுநடுங்கினர், அப்பாவி சபையோர்.

ரிப்போர்ட்: வீட்டில் இல்லை, சகுனி. நாட்டில் இல்லை. அவன் காட்டிலும் இல்லை. மணி அடித்து வந்தத் தேரில் (ஐ மீன் காரில்) அவனில்லை. அடுத்த வீட்டுக்காரன் தேரில் (ஐ மீன் காரில்) வந்து. புஷ்பகம் ஏறி வந்தான் பெங்களூரு. அந்த எங்கெளூரு. கைலாகு கொடுத்து ஜீப்லெ ஏத்திக்கிணோம். ஒரு கப் சாயா கொடுத்தோம், மூலிகை கலந்து. கக்கிப்பிட்டான், கக்கி. சொன்னெதெல்லாம் பொய். 

நவீன சகுனி (கெஞ்சும் குரலில்): ஐயா சிகண்டி! வணக்கமையா சிகண்டி! ‘நான் ஒத்துழைக்கவில்லை’ னு சொல்லலாமோ? அது நீதியோ? நான் என்ன யானையா? தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொள்ள!

கட்! கட்! கட்! மின்சார வெட்! தீவட்டி அவுட்! எங்கும் இருட்! 
உள்ளிருந்த படியே உரக்க பாடுகிறான் கோமாளி:

‘ ஆட்டம் முடிஞ்சு போச்சு, ஐயா!
  வெட்டு, மின் வெட்டு வந்து விட்டு.
  கூட்டம் கலையவேணும், சாமி!
  சட்டம் புதிசா வருப்போவது, கேளும்.
  1. நம்பினால் நம்புங்கள்: கோபாலனும், ஹஜாரேயும் கற்பனை பாத்திரங்கள்; 2. தொடரலாம்; தொடராமல் இருக்கலாம். வாசக தெய்வமே! 3. அப்படி தொடர்ந்தால், நாளை சத்லீக். ஆமாம்]
சித்திரத்துக்க்கு நன்றி:http://3.bp.blogspot.com/-0vbSQJpJc5E/T11J9LgvL3I/AAAAAAAAIfc/RM3sG5MBkPw/s200/dais.jpg


இன்னம்பூரான்
26 05 2013







No comments:

Post a Comment