Thursday, May 23, 2013

4. உலோக ரஸவாதம்: தணிக்கை




4. உலோக ரஸவாதம்: தணிக்கை

Innamburan S.Soundararajan Wed, May 22, 2013 at 2:25 PM


4. உலோக ரஸவாதம்: தணிக்கை என்ற முட்டுக்கட்டை 

Inline image 1

இன்னம்பூரான்

Thursday, April 21, 2011

பகவத் கீதையிலே, ‘…யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாஸ்ம காஞ்சனஹ’ என்று ஒரு வரி மண்ணையும் பொன்னையும் சமமானதாக நோக்கும் யோகியைப் பாராட்டுகிறது. இந்த வடக்கத்தி சமாச்சாரம் யார் வேணும்னு அழுதார்கள் என்று தமிழாவேசம் கொண்டோர்க்கு,  ஒரு அகத்தியர் பாடல்:

“கேட்கவே மதியில் அப்பா
கிருபையால் பத்துக்கு ஒன்று
மீட்கவே உருக்கிப் பார்க்க
மிக்கது ஓர் மாற்றாகும்
வீட்கமாய் தகடு அடித்து
விருப்புடன் காவி தன்னில்
ஆட்கவே புடமும் இட்டால்
அப்பனே தங்கம் ஆமே.”
தெரிஞ்சவா என்ன சொல்றான்னா, பொன்னுக்கு வீங்காதவர்களுக்குத் தான் ரஸவாதம் கை கூடும் என்று. வாஸ்தவம் தான். ஆனா, இந்த லெளகீக  பூலோகத்தில், இது எந்தத் தெய்வத்துக்குப் ப்ரீதீ, சொல்லுங்கோ? ஹைவே ராபரி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களோ? அந்த ஹைவே இலாகாவே ரஸவாதம் பண்றேன் பேர்வழின்னு ஒரு ஏடாகூடத்தில் இறங்க, ‘வெங்கலக் கடையில் யானை புகுந்த மாதிரி’ நாமளும் பீடு நடை போட, ஈயத்தை பாத்து இளிச்சது பித்தளை! எல்லாம் உலோக மயம் ஜகத்!
என்ன சுத்தி வளைக்கிறேனே என்று பார்க்கிறீர்களா? (அவான்னா வளைக்கறா!) குஜராத்திலிருந்து சற்றே விலகி, இன்றைய கால தேச வர்த்தமானத்தில், அநாமதேயமாக இருக்கவேண்டிய மா மாநிலம் ஒன்றில், இந்தக் கூத்து நடந்தது. என்னுடைய சஹபாடி ஒத்தன் பாம்பேயில் இருக்கும் ஒரு பொறியியல் கம்பெனிக்கு சேர்மன். எங்கள் டெண்டர் ஒன்றுக்கு விண்ணப்பித்தான். உனக்கு இது எப்டி மூக்கில் மணந்தது என்று யான் வினவ, அவன் கேட்டான், ‘ஏன்டா! நீ பேப்பர்லே டெண்டர் நோட்டீஸ்லாம் பாக்கமாட்டியா? அதுலே தாண்டா ஸூக்ஷ்மம்’ என்றான். அன்றிலிருந்து டெண்டர் நோட்டீஸெல்லாம் நான் ஓதாமல் இருந்த நாள் கிடையாது. வந்தது வினை!
காலை ஆறு மணி. வலது கையில் ஒரு டம்ளர் காஃபி; இடது கையில் நாளிதழ். சூடாக ஒரு டெண்டர் நோட்டீஸ்! ஆழ்ந்து விட்டேன். ‘என்னது இது? காஃபி ஆறிடுத்து. பேப்பராம் பேப்பர் என்று நம்மாத்து மாமி விரட்ட, நான் காஃபியை முழுங்க, அது புரைக்கேற, டெண்டர் டென்ஷன் என் தலைக்கு ஏறிவிட்டது.
அலுவலகம் போன உடனே, பொதுப்பணித் துறை தலைவருக்கு ஃபோன் போட்டுக் கேட்டேன், ‘சார்! சாதம் வடிச்சாச்சு. அதை மறுபடியும் கிச்சலி சம்பா அரிசியாக்கணும் என்கிறார்கள்!’ மனுஷன் எமகாதகன். விஷயத்தை ‘டக்’னு கிரகிச்சுண்டுடுவார். ஆனா, ‘ப்ளண்ட்டா’ வெட்டு ஒண்ணு, துண்டு இரண்டு என்ற வகையில் பேசுவார். ‘விஷயத்துக்கு வா. இந்த ஆடிட் காராளே, சுத்தி வளைச்சுண்டு…’ என்றார் அந்த ஐ.ஏ.எஸ். (‘வளைக்கிறேன் இரும்.’ என்று எனக்குள் கருவிக்கொண்டேன்.)
Iron Oreஇனி, ஒரு விளக்கம் அளித்த பிறகு தான், அவரிடம் சொன்னதைக் கூறுவது நலம்.
இரும்பு ஒரு தாது. அதிலிருந்து எஃகு தயாரிக்கப்படும். அதில் பலவகை – மைல்ட் ஸ்டீல் என்ற அடிப்படை எஃகு முதல் ஹை-கார்பன் ஸ்டீல் என்றெல்லாம் பல வகை. ‘ங’ப்போல் வளை’ என்ற ஒளவையார் வாக்குக்கிணங்க, மைல்ட் ஸ்டீலை, ராமர் தனுஸை வளைத்தது போல, இரும்பு ஆலையில், உரிய முறையில் வளைத்துவிட்டால், அதன் வலிமை அதிகம். ஒரிஜினல் பேடண்ட் பெயர்: ரிப்ட் டார்ஸ்டீல். (TOR steel is one of the highest grades of steel which is used in reinforced concrete. TOR steel is a Cold Twisted Deformed (CTD) Steel Reinforcement Bar.) அப்றம், நாய் வால் தான். வளைந்ததை நிமிர்த்த முடியாது. ஆனால், ‘வளைந்த டார்ஸ்டீலை நிமிர்த்தி மைல்ட் ஸ்டீல் ஆக்குவதற்கு, அதுவும் நூற்றுக்கணக்கான டன்கள், டெண்டர் போட்றுக்கா. நாலு கேள்வி கேட்போம், சொல்லிப்பிட்டேன்’ என்றேன்.
எனக்கு ஆடிட் ஆட்சேபணையை விட, வருமுன் காப்போனாக, தவறைத் தடுப்பது பிடிக்கும். ஆகவே, தந்தி அடிக்கற மாதிரி எங்களுக்குள் வார்த்தை பிரயோகங்கள். மத்தியானம் இரண்டு மணிக்கு மீட்டிங். ஏதோ ஒரு வால் அறுந்து போகும். ‘அது நீயா / ஹைவே முதன்மை பொறியாளரா?’ என்று சவால் விட்டார்.
இனி நாடக பாணி; தெளிவுற விளக்கும். கிஞ்சித்து ஆங்கிலக் கலப்படம். இரும்பு எஃகு ஆகிறது. சந்தேஹமிருந்தா கேளுங்கோ. சந்தேஹ நிவாரணத்துக்கு, நான் உத்தரவாதம்.
கதாபாத்திரங்கள்: துறைத் தலைவர் (து.த.), டெபுடி அக்கவுண்டண்ட் ஜெனெரல், (டீ.ஏ.ஜி: இருக்கிறதுல்ல ஜூனியர்.) தலைமைப் பொறியாளர் (த.பொ.) + ஒரு படை, டவாலிகள்.
சித்துண்டி: வறுத்த முந்திரிப் பருப்பு, குணுக்கு போன்ற வடை, வடை போன்ற குணுக்கு, காஃபி / டீ.
பின்னணி இசை: பழைய ஏர்-கண்டிஷரின் உறுமல்.
(அரை மணி முன்னால் வந்து து.த.வின் காதைத் த.பொ. கடித்ததன் விளைவாக…)
து.த: ‘ஸெளந்தரராஜன்! எல்லாம் ஆடிட் கிருத்திரமம் தான். நீங்க தான் ஏன் இத்தனை டார்ஸ்டீல் தேக்கம்? என்று கேட்டீர்களாம்.
த.பொ: அதனால்தான் இந்த டெண்டர். அவா கேட்காட்டா இந்த டார்ஸ்டீல் தேக்கம்…(சொல்லாமல் சொன்னது: எங்கள் தூக்கத்தைக் கலைக்காது!)
டீ.ஏ.ஜி. (அடியேன்): புள்ளி விவரங்களைப் பாரும். பாலம் கட்டத் தனி இலாகா. ஹைவேஸ் ரோடு இலாகாவுக்கு எஃகு தேவையில்லை. அஞ்சு வருஷமா, இத்தனை லட்ச ரூபாய் முடக்கம். ஏன் இதை வாங்கினீஹ? எந்த எஸ்டிமேட்? ஆமாம்? எப்டி இந்த ரஸவாதம் நடக்கும்?
த.பொ.வின் படைச் சிப்பந்தி ஒருவர், அவர் காதில் முணுமுணுக்க, அவர் பகர்ந்தது: ‘முதல் பாயிண்ட்: டீ.ஏ.ஜி. is not a technical person. இரண்டாவது பாயிண்ட்: இந்த ‘ரஸவாதம்’ ஆட்சேபனை கடிதம், ஆடிட் கிட்டேருந்து வரவேயில்லை. I object to Soundararajan fishing in troubled waters. நான் பதில் சொல்வதற்கில்லை. (கோப்புகளை மூடுகிறார், என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டே.)
து.த. Yes. Soundararajan is fishing in troubled waters. He is paid for it. But, you are in troubled waters. ‘த.பொ. என்னிடம் சொல்லுங்கள்: ‘டார்ஸ்டீலை மைல்ட் ஸ்டீலாக மாற்றுவது எப்படி?’
[நீண்டதொரு மெளனம் நிலவியது. ஒரே டென்ஷன்.]
த.பொ: இதெல்லாம் சகஜம்; எளிது; புதிது அல்ல. Everything is above board. டீ.ஏ.ஜி.க்குக் கரும்பு தின்ன ஆசை. நான் ஏன் கொடுக்க வேண்டும்? (ஆனைக்கு தீனி போட்டுக் கட்டுபடியாகுமா? என்று கருவிக்கொண்டே!)
டீ.ஏ.ஜி.: என்னைப் பற்றி இருவரும் பேசுகிறீர்கள். நான் ஆடிட் ஆட்சேபணை எழுதி வந்திருக்கிறேன். கொடுத்து விடவா?
த.பொ.வின் அடிப்பொடி: (உரக்க) வேண்டாம்! வேண்டாம்!
[கொஞ்சம் மெளனம் நிலவியது. ஒரே டென்ஷன். அதிகப்படி உறுமல்கள் மென்மையாகக் கேட்டன.].
து.த.: Let the Audit speak.
டீ.ஏ.ஜி: நான் சொல்வதைத் த.பொ. ஆதாரத்துடன் மறுக்கட்டும்.
1. இந்த டெண்டர் சட்டப்படியும் செல்லாது; டெக்னிகலாகவும் இயலாதது. மொட்டை அடிச்சுட்டு வகிடு எடுக்கறாப்பல!
2. நடக்கப் போவது பண்ட மாற்றம். இந்த அழகில் ‘உருக்குவதில் சேதாரம்’ இத்தனை விழுக்காடு என்று ‘டெக்னிகல்’ பாயிண்ட் வேறே!!! நான் சொல்வது தப்பு என்றால், த.பொ.விடம் எஸ்டிமேட் கேட்பேன். ஏன்? து.த. வாங்கிப் பார்க்கட்டுமே!
3. அத்தருணம், இவர்களே எத்தனை நஷ்டம் எஸ்டிமேட்டில் போட்டிருக்கிறார்கள் என்று பார்க்கவும்.
4. Let me take an executive stand for a change. உங்கள் வசம் இருக்கும் இலாகாக்களில், இன்னார், இன்னாருக்கு டார்ஸ்டீல் தேவை. அவர்களும், கேட்டுப் பார்த்து, கேட்டுப் பார்த்து, களைத்து போய்விட்டார்கள். அவர்களுக்குக் கொடுப்பதை விட்டு விட்டு…
து.த.: டீ.ஏ.ஜி.க்கு நன்றி. ஆனால், அவர் ஆடிட் ஆட்சேபணையை விட்டுக் கொடுத்ததைப் பற்றி, ஏ.ஜி.யிடம் புகார் அளிப்பேன் (அப்பாடா! முதல் புன்சிரிப்பு.).
(கடுமையான தொனியில்): த.பொ. இன்றே இந்த டெண்டரை வாபஸ் பெற்று, எனக்கும், டீ.ஏ.ஜி.க்கும் எழுத்து மூலம் அதைத் தெரிவிக்க வேண்டும்.  மீட்டிங் ஓவர்.
டீ.ஏ.ஜி: இந்த டெண்டர் யாருக்குப் போயிருக்கும் என்று சொல்லவா?
து.த.: நோ. நீ வந்த காரியம் ஓவர். மீட்டிங்கும் ஓவர். You stay for a minute.
[து.த: சொல்லு. யாருக்குப் போயிருக்கும்?
டீ.ஏ.ஜி: சொல்வதற்கில்லை. ஆனால், இன்னார் இன்னார் எழுதிய கடிதங்களைப் பாருங்கள். (காட்டுகிறார். இருவரும் வியப்பு மேலிட, கலைந்து போகிறார்கள்.) அன்றிலிருந்து, அந்த து.த., டீ.ஏ.ஜியின் நண்பேன்டா.]
(தொடரும்)
================================
படங்களுக்கு நன்றி: http://reconindustries.tradeindia.comhttp://ceylonsteel.atsrilanka.com






Published: http://www.vallamai.com/?p=2850
Image Credit:http://24.media.tumblr.com/2b000006ca25ae41feee3efe08ef6ae4/tumblr_mmn7x9tKlu1sn43zyo1_400.jpg


  • Karthik wrote on 21 April, 2011, 11:50எப்படி எல்லாம் பிராட் பண்றாங்க
  • Geetha Sambasivam wrote on 21 April, 2011, 13:03soooooooooooper!
  • பவள சங்கரி wrote on 21 April, 2011, 22:11//பின்னணி இசை: பழைய ஏர்-கண்டிஷரின் உறுமல்.
    (அரை மணி முன்னால் வந்து து.த.வின் காதைத் த.பொ. கடித்ததன் விளைவாக…)
    து.த: ‘ஸெளந்தரராஜன்! எல்லாம் ஆடிட் கிருத்திரமம் தான். நீங்க தான் ஏன் இத்தனை டார்ஸ்டீல் தேக்கம்? என்று கேட்டீர்களாம்.
    த.பொ: அதனால்தான் இந்த டெண்டர். அவா கேட்காட்டா இந்த டார்ஸ்டீல் தேக்கம்…(சொல்லாமல் சொன்னது: எங்கள் தூக்கத்தைக் கலைக்காது!)//
    இதைவிட நகைச்சுவையாக உங்களாலேயே எழுத முடியுமோ என்னவோ………..இனிய ரசனைக்குரிய ரசவாதம்……
இன்னம்பூரான்



No comments:

Post a Comment