Thursday, May 30, 2013

கனம் கோர்ட்டார் அவர்களே!-5


கனம் கோர்ட்டார் அவர்களே!-5

Innamburan Innamburan Fri, Nov 11, 2011 at 10:41 PM

கனம் கோர்ட்டார் அவர்களே!-5
இன்னம்பூரான்
சட்டதிட்டங்கள் ஏழைக்கும் பாழைக்கும் சமய சஞ்சீவியாக உதவாவிடின், சமத்துவம் ஒரு மாயை. ஜனநாயகம் பயனற்றது. மனித உரிமை பறி போகும். வலிமை விலை போகும். அதர்மம் அரசாளும். கோர்ட்டுக் கச்சேரியிலிருந்து சற்றே நகர்ந்து, மரத்தடி உபதேசம் எதற்கு என்றால், இன்று ‘நவம்பர் 9′ தேசியச் சட்ட ஆலோசனை தினமாகக் கொண்டாடப்படுகிறது என்பதே. The Legal Services Authorities Act, 1987 அமலுக்கு வந்த தினம், 1995-ல். இந்திய அரசாளும் மரபு செங்கோலைப் போற்றுகிறது. பாண்டியன் சபையில் கண்ணகி வழக்காடுவதே மனித உரிமையின் போர்க்கொடி. பாவை மன்றம், சதுக்கப்பூதம், ஆராய்ச்சி மணி, சிபிச்சக்ரவர்த்தியும் புறாவும், ஜஹாங்கீரின் துப்பாக்கி என்பெதல்லாம் ‘தர்மம் தலை காக்கும்’ பாரதபூமியின் சங்கேதங்கள்.
தற்கால வரலாற்று நோக்கில் பார்த்தால், 1851-ல் பிரான்சு நாட்டில் ஏழைகளுக்கு இலவசச் சட்ட ஆலோசனை திட்டமிடப்பட்டது. இங்கிலாந்தில் 1944-ல் உரிய நடவடிக்கைகள் தொடங்கின. தற்காலம், நான் பணி புரிந்த மக்கள் ஆலோசனை மன்றத்தின் மூலமாக இந்த வகையில் ஒரு மாபெரும் மக்கள் பணி, திறம்பட, நாடு முழுதும், தன்னார்வக் குழுக்களால், இலவசமாக, இயங்குகிறது. குடும்பப் பெண்மணிகள்தான் இதன் முதுகெலும்பு. வழக்கறிஞர்களும் வந்து உதவுகிறார்கள். அரசின் திட்டமும் செவ்வனே நடைபெறுகிறது. அமெரிக்காவில் இத்துறையில் தன்னார்வப் பணி இயங்குவதை லாஸ் அஞ்செலசில் ஆய்வு செய்ய முடிந்தது.
ஜனநாயக இந்தியாவில் அடித்தள/கீழ்ப்படுத்தப்பட்ட/நசுக்கப்பட்ட சமுதாயத்திற்கு,(தலித், பெண்ணினம், சிறார்கள், மாற்றுத்திறனாளிகள், இனவெறியால் பாதிக்கப்பட்டவர்கள், தொழிலாளிகள், சிறைப்படுத்தப்பட்டவர்கள், குறைந்த வருட ஊதியம் பெறுபவர்கள் – அநேக மாநிலங்களில் தற்காலம் இது ஒரு லக்ஷம் ரூபாய்). இலவசச் சட்ட ஆலோசனை/உதவி அரசியல் சாஸனத்தின் 39 A பகுதி 1950-ல் அளித்த உரிமை. ஆனால், எல்லாமே நத்தை வேகத்தில் நகர்ந்தன. 1952-லிருந்து 1960 வரை சட்ட அமைச்சர் மாநாடுகள், சட்டக் கமிஷன், அங்குமிங்கும் இது பற்றி விலாவாரியாக பேசிக் கொண்டே இருந்தார்கள். 1960-லிருந்து 1980 வரை இருபது வருடங்களுக்கு, சில மாநிலங்களில் பரிக்ஷார்த்தமாக, சட்ட ஆலோசனை மன்றங்கள், அது சம்பந்தமான போக்குவரத்துக்கள், (என் கணிப்பில் ‘ஏனோ தானோ’ என்று) நடந்த வண்ணம் இருந்தன. 1980-ல் ஜஸ்டிஸ் பி.என்.பகவதி அவர்கள் தலைமையில், ஒரு மேற்பார்வைக் கமிட்டி அமைக்கப்பட்டது. லோக் அதாலத் முறையும் தலை தூக்க ஆரம்பித்தது. அப்பாடா! 1987-ல்  ‘The Legal Services Authorities Act, 1987’ என்ற சட்டமே இயற்றி விட்டார்கள், அரசியல் சாஸனம் பிரகடனப்படுத்தி 37 வருடங்களில். அதற்கப்பறம் கிடப்ஸில் கிடந்த இந்தச் சட்டத்திற்கு, திடீரென்று கும்பகர்ண உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட அரசு, 1994-ல், சில பிரேரணைகளை நிறைவேற்றி, நவம்பர் 9, 1995 அன்று, அடேங்கப்பா!, அரை நூற்றாண்டு கடப்பதற்கு முன், அமலுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். ரோஷம் பொத்துக் கொண்டு, டிசம்பர் 5-1994 அன்றே, ஒரு மாதத்திற்குள், தேசியச் சட்டப் பணி மையம் நிறுவி விட்டார்கள். அதனுடைய கிளைகள் மாநிலங்களில்/மாவட்டங்களில்/தாலுகாக்களில் உள்ளன. உங்களுக்குத் தெரியுமோ?



கி.காளைராசன் Sat, Nov 12, 2011 at 7:24 AM


ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2011/11/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
கனம் கோர்ட்டார் அவர்களே!-5
இன்னம்பூரான்
சட்டதிட்டங்கள் ஏழைக்கும் பாழைக்கும் சமய சஞ்சீவியாக உதவாவிடின், சமத்துவம் ஒரு மாயை. ஜனநாயகம் பயனற்றது. மனித உரிமை பறி போகும். வலிமை விலை போகும். அதர்மம் அரசாளும்.

 சத்தியமான வார்த்தைகள்.
சில தீர்ப்புகள் வருவதற்கு முன்னால் மனுதாரர் மரணம் எய்தி விடுகிறார்.  அதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அன்பன்
கி.காளைராசன்



R.M. Paulraj 


> சட்டதிட்டங்கள் ஏழைக்கும் பாழைக்கும் சமய சஞ்சீவியாக உதவாவிடின்,
> சமத்துவம் ஒரு மாயை. ஜனநாயகம் பயனற்றது. மனித உரிமை பறி போகும்.
> வலிமை விலை போகும். அதர்மம் அரசாளும்.


நான் சுவைத்து ரசித்து அசை போட்டுக்கொண்டிருந்த வரிகள் நண்பர் கா.ரா.வையும் கவர்ந்திருக்கின்றன.

அன்புடன்,
ஆர்.எம்.பால்ராஜ்
R.M.Paulraj



சித்திரத்துக்கு நன்றி: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTvoz3KzoO2kEuMqNSxe8Mi74ChCFOh8fqnvB640-vJqCi3jXTVnHdlQHvKLYvc_M5QZubzpsv52bHFp3A1peuWZoouoM4CWcbgsETk1NdVzINnrb_hCjyw_Q0eMknB5WsBMDesRlU5IN3/s1600/DSCF4747.JPG
இன்னம்பூரான்
29 05 2013

No comments:

Post a Comment