Wednesday, October 2, 2013

Die Wende! :அன்றொரு நாள்: அக்டோபர் 3




அன்றொரு நாள்: அக்டோபர் 3

Innamburan Innamburan Mon, Oct 3, 2011 at 12:07 AM


அன்றொரு நாள்: அக்டோபர் 3
 Die Wende! 
Deutsche Einheit!! 
Tag der Deutschen Einheit!!!

ரொம்ப சந்தோஷம். இந்த ‘அன்றொரு நாள்’ இழைகளுக்கு பின்னூட்டம் கேட்டு அலையும் எனக்கு, ஸுபாஷிணியின் ‘முன் வரும் மணியோசை’ நல்வருகை; டானிக்.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் வெஸ்ட்ஃபாலியா பகுதியில் வளைய வரும் போது, இரண்டு உலகப்போர்களின் பலத்த அடியையும், பின்வந்த பொருளியல் சங்கடங்களையும் அலாக்கா சமாளித்து வளம் செழித்த நாடாக திகழ்ந்த ஜெர்மனியை போற்றாமல் இருக்க முடியவில்லை. அக்டோபர் 3, வருடா வருடம் அங்கு திருவிழா நாள். ஒரு காலகட்டத்தில், குறுநில அரசுகளின் தொகுப்பாக இருந்த ஜெர்மனி ஒன்றுபட்ட ஆளுமையாக வலிமை பெற்றதும், ஹிட்லர் என்ற முரண் முள்ளாகத் தைத்ததால், அவை யாவும் ஒழிந்ததும், நாடு இரண்டு பட்டதும், அந்த பாகப்பிரிவினையின் அவமான சின்னமாக நின்ற பெர்லின் வால் என்ற சுவர் நவம்பர் 9, 1989 அன்று இடிக்கப்பட்டதும்  வரலாறு. சில நெருடல்களை தவிர்க்க, விழா எடுப்பது அக்டோபர் 3-ம் தேதி, வருடா வருடம். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நகரத்தில். விழாக்கோலம் பூண்ட ஜெர்மனியை, திருமதி. ஸுபாஷிணி அனுப்பிய விழியங்களில் கண்டு களிக்கவும். நெருடல்கள் பிறகு பேசப்படும். இந்தியாவின் குடியரசு விழாவை டில்லியில் நடத்தும் கோலாகலத்தை இந்தியாவின் மாநகரங்களில், ஜெர்மனி மாதிரி ஏன் கொண்டாடக்கூடாது?
ஒரு நாட்டின் வரலாற்றை, முன்னிருந்து பின்னும் (பிஸ்மார்க் என்ற ஜெர்மன் சாணக்யரிலிருந்து ஏஞ்சலா மெர்க்கல் என்ற தற்கால அதிபர் வரை), பின்னிருந்து முன்னும் (ஐரோப்பாவில் இன்றைய ஜெர்மனியின் உச்சாணிக்கிளையிலிருந்து ஹிட்லர் காலத்து அதல பாதாளம் வரை), ஒரு நிகழ்வை மையப்படுத்தியும் (மதில் விலக, மதி துலங்க...) படித்து வருவோமானால் சுவை மிகும்;பயன் கூடும். 
ஏஞ்சலா மெர்க்கல் கிழக்கு ஜெர்மனியிலிருந்து வந்த சராசரி பெண்மணி; விஞ்ஞானி. ஓஹோ வசீகரம், ஆஹா படித்த மேதை, ஆட்டிப்படைப்பவர் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், ஜெர்மனியிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, உலக ஆளுமையிலும் சரி, இவுக தான் உசத்தி. மக்கள் ஆதரவு, இவருக்கு ஹனுமான் பலம். ஜெர்மனியின் அதிபர்களில் கோன்ராட் அடெனாயர், வில்லி ப்ரேண்ட், ஹெல்மத் கோஹ்ல் ஆகியோரை எளிதில் மறக்கமுடியாது. அந்த வரிசையில் இவரும் சிறப்புற விளங்குகிறார்.ஜெர்மனியின் ஒரு நற்பண்பு, பெரும்பான்மையோர் ஒத்துப்போகும் தன்மை (Consensus) ~பணி செய்யுமிடம், சமுதாயம் & அரசியல். பலன்: ஏற்றுமதி அதிகம்; கட்டுக்கோப்பான ஊழியமும், கூலியும்; பலிக்கும் பட்ஜட்.
ஜெர்மனி ஒன்று பட்டது என்றால், அது ஹெல்மத் கோஹ்ல் என்ற அதிபரின் கைங்கர்யம் என்று சிறுபிள்ளையும் சொல்லும். பெர்லின் சுவர் விழுந்ததும் அவர் ஆற்றிய உரையை இந்தியர்களும் கேட்க வேண்டும். மேற்கு ஜெர்மனியின் தேசீய கீதத்திலிருந்து, முதல் அடி எடுத்து,
’...இது ஒற்றுமை பேசுகிறது; நியாயம் பேசுகிறது; விடுதலை பேசுகிறது; நம் தந்தையர் தந்த சுதந்திர ஜெர்மனி வாழிய! வாழியவே! ஒன்றுபட்ட ஐரோப்பாவும், அதன் சுதந்திரமும் வாழிய! வாழியவே!..’( ஒன்றுபட்ட ஐயோப்பாவின் தந்தை ராபர்ட் ஷூமன் என்ற ஃபிரன்ச்சுக்காரரை பற்றி பிறகு பேசலாம்.)
‘ஊரு ரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொம்மாளம்!’ இது வரை சொகுசாக இருந்த ஃபிரான்ஸும், இங்கிலாந்தும் முணுமுணுத்தன. ஹூ கேர்ஸ்? அதிபர் கோஹ்ல், சாமர்த்தியமாக, தற்பெருமையை சற்றே மூட்டை கட்டி வைத்து விட்டு, அடிக்கடி மாஸ்கோ சென்று, கோர்பச்சோவ்வை தன்னக்கட்டி, அக்டோபர் 3, 1990 அன்று திருவிழாவை துவக்கி வைத்தார். அவருடைய பலம், மக்கள் ஆதரவை கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொண்டது, சுய நம்பிக்கை, வரலாற்றின் நாடி பிடித்துப்பார்க்கும் திறன். பிற்காலம், கிழக்கு ஜெர்மனியை சேர்த்துக்கொண்டதால் விளைந்த அதீத செலவு, ஊழல் புகார் எல்லாம் விவரிக்க இது இடம் இல்லை; தேவையும் இல்லை. ஹெல்மெட் மாறிய கதை:
ஜெர்மனியின் அடிப்படை சட்டம் அதிபரின் மீது பார்லிமெண்ட் ஏறி மிதிக்காமல் பார்த்துக்கொள்கிறது. ஹெல்மெட் ஷ்மிட் என்ற அதிபர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் 256: 235 என்ற அளவில் வெற்றி பெற்றததின் பயனாக 1982ல் ஹெல்மெட் கோஹ்ல் பதவி ஏற்றார். அங்கு தான் அவருக்கு இரண்டு நாள் முன் குறிப்பிட்ட கூடு விட்டு கூடு பாயும் தேர்தல் விதி அபூர்வமாக உதவியது. பின்னணியில் இருந்தது, பதவி இழந்த ஹெல்மெட்டின் கட்சியும், கூட்டுக்கட்சிகளும் சில வாரங்களாக நடத்திய உள்குத்து, பாசாங்கு, முட்டுக்கட்டைகள் எனலாம். ஹெல்மெட் ஷ்மிட்டின் வெளியுறவு அமைச்சர் கென்ஷர் தான் ஒரு குட்டிக்கட்சி அமைத்து ஹெல்மெட் கோஹ்ல் பக்கம் ஓடி வந்து விட்டார். (ப.சி. அவர்கள் பா. ஜ. க.வில் ஐக்யம் ஆனால் மாதிரியா? என்றெல்லாம் கேட்கக்கூடாது! ஜெர்மனி ஜெர்மனி; இந்தியா இந்தியா!). என்னது இது? கோஹ்ல் நிம்மதியாக ஆட்சி புரியமுடியுமா? என்று கூட கேள்வி எழுந்தது. அவருடைய அரசியல் சாமர்த்தியம் கை கொடுக்க, அவர் 16 வருடங்கள் பதவியில் இருந்தார், திரும்பதிரும்ப தேர்ந்தெடுக்கப்பட்டு.
உகந்த தருணம் வரும்போது விலி ப்ரேண்ட், கொன்ராட் அடுனாய்ர் ஆகிய அதிபர்களை பற்றி பேசலாம். திருவிழாவின் ஊடே வந்த நெருடல்களை கழட்டி விடுவோம். பெர்லின் மதில் விழுந்த தினமாகிய நவம்பர் 9, உகந்த திருவிழா நாள் என்றாலும் அதே நாளில் 1918ல் ஜெர்மானிய குடியரசு பிரகடனம் செய்ய்ப்பட்டது என்றாலும், அதே நாளில் 1923 வருடம் ஹிட்லரின் முதல் சதி முறியடிக்கப்பட்டது என்றாலும், ஐயகோ! அதே நாளில் 1938ல் ஹிட்லரின் யூதவதம் தொடங்கியது. எனவே, அந்த நாளை தவிர்க்க எண்ணி, இன்றைய தினம் திருவிழா நாளாகியது.
சுபம்!
இன்னம்பூரான்berlin+wall+germany.jpg
03 10 2011
பி.கு. அன்றொரு நாள், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஏன் ‘ஏடன்’ கூட பாரத கண்டத்தில் இருந்தன. ஹூம்!

உசாத்துணை:

ஸுபாஷிணி உபயம்:





No comments:

Post a Comment