Monday, December 9, 2013

நோட்டோலை



நோட்டோலை

Innamburan S.Soundararajan 9 December 2013 18:24


முன் குறிப்பு: கொதிக்கக் கொதிக்க சூப்பு குடித்தால் தனி ருசி. வல்லமை என்றால் சும்மாவா? அனுப்பிய பத்து நிமிடங்களில் பிரசுரம் செய்து விட்டார்கள்.
பிரசுரம்http://www.vallamai.com/?p=40569 

நோட்டோலை

Monday, December 9, 2013, 23:00

இன்னம்பூரான்
2
சாக்கு சாக்கா காசு பணம் டோய்!
கோக்கு மாக்கா சிக்கன் குருமா டோய்!
நோக்கும் நேக்கும் நாக்குக் கேட்டாலும் டோய்!
வாக்குக் கேக்கறான்னு மசியாதே டோய்!
மகா கனம் பொருந்திய மகாஜனங்களே!
விடுதலை வாங்கியது நன்நிமித்தமேயாயினும், வாக்களிப்பது ஜனநாயக உரிமையாயினும், குடிசை போட இடம் கேட்டு, அங்கு மனையொன்று அமைத்து, அடுத்த மனையை ‘லபக்கி’ மாடமாளிகை கட்டி, ஊரை வளைத்து கோட்டை கொத்தளம் எழுப்பி, உம்மை நடுத்தெருவில் விட்ட பிரதிநிதிகள் சிலரால் ஜனநாயகத்தின் நாயகம் எண்டேஞ்சர்ட் லிஸ்டில். களிம்போ! கட்டெறும்போ! வந்து குதித்தது நோட்டோலை ( NOTA). 2013 புள்ளி விவரம் கேளும். புள்ளி விவரம் ஒரு புதிய இலக்கிய தரவு! ஆமாம். புள்ளியில் விவரம் கொடுத்து சேதிக்குத் திரை போடலாம். விவரத்தில் புள்ளி போட்டு கதி கலங்க அடிக்கலாம். ஆட்டைத் தூக்கி மாட்டில் போடலாம். மாட்டைத் தூக்கி ஒட்டகத்தில் போடலாம். கயிறை மணலாக பிரிக்கலாம். யான் அந்த மாயாமாலங்கள் செய்ய தகுதியற்றவன். கொஞ்சம் உண்மையை கண்டு நடுங்குவோம்.
மக்கள் மன்றத்தில், இந்த தேர்தல் கமிஷன் நோட்டோலை வாசிக்கிறது. ஷரத்து 158 படி(Representation of the People Act, 1951)இவை செல்லாத ‘நோ’ வாம்; நோவு தான்! இத்தனைக்கும் காத்த வீர்யனுக்கும், வீராயிக்கும் வாக்களித்தவர்கள் எந்த கவனத்தில் செய்திருக்கலாம் என்பது ஊகம். நோட்டோலை முத்திரை போட்டவர்கள் கவனம் செலுத்தித் தான் ‘ஒண்ணுமே உருப்படாது’ என்று தீவிரமாக சிந்தித்து இயங்கியவர்கள் எனலாம். நடக்கவேண்டியது, வேண்டாதது எல்லாம் நடந்து முடிந்த பின் இவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், டிபாசிட் இழந்தவர்களின் முகத்திரை கிழியலாம்.
ஒன்று மறக்கலாகாது. ஒரு வாக்குச்சாவடியிலாவது இந்த நோட்டாலை முத்திரையாளர்கள் இல்லாமல் இல்லை. அதாவது, மக்களுக்கு புரிந்து விட்டது, இந்த பாணத்தின் மகிமை. மத்திய பிரதேசத்தில் பான்செமால் தொகுதி பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு நோட்டோலை போட்டவர்களின் எண்ணிக்கை தோற்றவர், கெலித்தவருக்குள்ள வித்தியாசத்தை விட அதிகம். அதாவது அவர்களில் பெரும்பாலோர் தோற்றவருக்கு வாக்களித்திருந்தால், அவர் கெலித்திருப்பார்! சர்வ அசக்தி படைத்த வாக்காளர்களே! கவனிக்கவும். இது பழங்குடி தொகுதி. போட்டி இருவர் மட்டும். இருவருக்கும் உள்ளூரில் நல்ல பெயரோ, கெட்ட பெயரோ, இரண்டுமோ இருந்திருக்க வேண்டும். பழங்குடி மக்கள் சக்திக்கு சலாம்! கவார்தா, கைராகர், கல்லாரி, டோங்கர்காவ்ம் தொகுதிகளிலும் இதே கதி. நக்சல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பஸ்தார்-சர்குஜா பகுதிகளில் நோட்டோலை அலை, அலையாக: சித்ரகூட்: 10848; தந்தேவாடா-9677, கேஷ்கல்-8381, கொண்டகாவ்ம்-6773.ரஜிம்-5673, பாதால்காவ்ம் 5533. அரசு இதன் பின்னணியை நோக்கினால், பல உண்மைகள் கதவு திறக்கும்.
வம்சாவளிக்கு ஆதரவு இல்லையோ? சர்ச்சைக்கு அப்பாற்படாத அஜீத் ஜோகியின் மகனுக்கும், மனைவிக்கு நோட்டோலை 7115, 1074. பின் தங்கிய பிராந்தியம் எனப்படும் சட்டீஸ்கரில் தான் நோட்டோலை அதிக. மெத்த படித்த டில்லியில் குறைவு. 460 வாக்காளர்களுக்கு ஷீலா தீக்ஷித் மேலும் நம்பிக்கையில்லை; அர்விந்த் கெஜ்ரிவால் மேலும் நம்பிக்கையில்லை. மத்ய பிரதேஷ் முதல்வர் சிவராஜ் செளஹான் மீது 4112 பேருக்கு நம்பிக்கையில்லை; ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மீது 3729 பேருக்கு நம்பிக்கையில்லை.
போறப்போக்கைப் பார்த்தால் நான் தேர்தலுக்கு நின்றால், என் பெயரை NOTA என்று மாற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
இப்படிக்கு,
நோட்டா இன்னம்பூரான்
09 12 2013
உசாத்துணை:
இன்றைய ஹிந்து இதழ்.
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி: http://2.bp.blogspot.com/-5XCyte3dQZ0/UnNMi2PIEHI/AAAAAAABcvc/p9F9u1CshuY/s1600/2.jpg








No comments:

Post a Comment