Tuesday, June 10, 2014

சிரிச்சு மாளலெ 7

***
சிரிச்சு மாளலெ 7


இன்னம்பூரான்
ஜூன் 11, 2014

‘அப்பாணை’ என்று தலையில் அடித்து சத்தியம் பண்ண பிறகு தான் ‘நான் மாங்காய் அடிக்கல்லை; களாக்காய் தான் அடித்தேன்’ என்று பொய் சொல்லுவோம், பால பருவத்தில். நம்பறாங்களா? இல்லையா? என்று பாயிண்ட் இல்லை. ஒன்று கிடக்க, ஒன்று சொல்வது தான் பொய்யை மெய்யாக்குவதில் முதல் பாடம். மெய்யை பொய்யாக்குவதும் உண்டு, ஆதாயம் கிடைத்தால், அரசியல் தளத்தில். கனம் கோர்ட்டார் முன்னிலையில் அளிக்கப்படும் வாக்குமூலங்கள் ‘அப்பாணை’ (I, Dumeel, son of Mr.Damaal, லொட, லொடா...) என்று தான் தொடங்கும். இத்தனைக்கும் ஒரு ஆங்கிலேய சட்டத்துறை வல்லுனர் பகர்ந்த நிதர்சனம்:
‘அம்மை அறிவோம்; அப்பன் அறியோம்! ‘. அப்படிப்பார்க்கப்போனா, ‘அப்பாணை’ என்பதே சத்தியம் என்று சொல்ல இயலாது. இனி, ‘அம்மானை’ (மெல்லினம் மென்மையாக இருக்கிறது!) என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணனும்னு சட்டம் வரலாமாக்கும். இது நிற்க.

கவர்னமெண்ட் தரப்பில் கனம் கோர்ட்டார் முன்னிலையில் அளிக்கப்படும் வாக்குமூலங்கள், அநேகமாக, சுப்பன் எழுதி, குப்பன் கையொப்பமிட்டு, ஆஜராகி பதிவு செய்வதாக அமையலாம்.
மேலா எழுதி, அடிமட்டம் தாக்கல் செய்யும். ஒரு சமயம், சட்டசிக்கல்களுக்கு பயந்து, நான் எழுதியதை மேலா தாக்கல் செய்ய, மேலா எழுதியதை நான் தாக்கல் செய்ய, கனம் கோர்ட்டார் ஓடாத குறை! இதுவும் நிற்க.

நமது மாஜி ராணுவ தளபதி ஜெனெரல் வீ.கே. சிங் அவர்களுக்கும், பிந்தைய அரசுக்கும் ஓயாத  சச்சரவு. முழுக்கதை சுவாரஸ்யம். அதை விடுவோம். எல்லாரும் உயிருடன் இருக்கிறார்கள். ஜெனெரல் வீ.கே. சிங் மற்றொரு ஜெனெரல் மீது எடுத்த நடவடிக்கை முறைகேடானது என்று ஜூன் 4, 2014 அன்று நமது ராணுவ அமைச்சரகம் ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்தது. அது பிந்திய அரசின் நிலைப்பாடு. ஜெனெரல் வீ.கே. சிங் அவர்களை அமைச்சரவையில் அமர்த்தியிருக்கும் மோடி தர்பாரின் நிலைப்பாட்டுக்கு முரண். ‘அப்பாணை’ என்று தலையில் அடித்தி சத்தியம் பண்ண பிறகு தானே அந்த ‘வாக்குமூலத்தை’ தாக்கல் செய்தியிருக்கிறார்கள். நமது ராணுவ அமைச்சர் திரு. அருண் ஜெட்லி இது பற்றி ராணுவ அமைச்சரக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். அதற்குள், காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சங்கவி, அமைச்சர் வீ.கே.சிங் ராஜிநாமா செய்யவேண்டும் என்று முழங்கியிருக்கிறார்!

எல்லாமே சுவாரஸ்யம் தான்! என்ன சொல்றேள்?
-#-
சித்திரத்துக்கு நன்றி: 


No comments:

Post a Comment