Thursday, October 30, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் 14 கல்மனதும் வெல்லப்பாகும்

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் 14
கல்மனதும் வெல்லப்பாகும்

இன்னம்பூரான்
அக்டோபர் 31, 2014

மேல் துண்டை வாயில் திணித்துக்கொண்டு, பொது மன்றத்தில் குலுங்கி, குலுங்கி, தேம்பினார். அன்று படித்ததும், வானொலியில் கேட்டதும், என் தந்தையும் கண் கலங்கியதும் என் கண் முன் நிற்கின்றன. தொலைக்காட்சி, வீடீயோ எல்லாம் காணாத காட்சி, அந்தக்காலம். ஹிந்து நாளிதழில் அந்த ஃபோட்டோ வந்திருந்ததாக ஞாபகம். பாதி சமாச்சாரம் நாமே சித்திரம் வரைந்து கொள்ள வேண்டியது தான். அதனால் தான் மறக்கவில்லை. ஹெச்.வி.காமத் எம்.பி. பாரபக்ஷமற்ற, தாக்ஷிண்யப்படாத மனிதர். அரசின் மீது குறை காண்பதில் மன்னன். நேருவையும், படேலையும் பிச்சு உதறுவார். எதிராளி எனலாம். அவர் நேருவிடம் அர்ஜெண்டாக பேசினார். நேருவும் கவலையுடன் சேதி ஒன்றுமே கிடைக்கவில்லை என்றார். சற்று நேரம் கழித்து, காமத் மறுபடியும் ஃபோன் செய்தார். நேரு பேசவில்லை. ஒரு வினாடி தாமதம். மனிதன் தவித்துப்போய் விட்டார். டெலிஃபோன் பெண் கூறினாள், ‘அவர் படேலுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.’. அடிடா! பிடிடா! என்று ஃபோனை வைத்து விட்டு, பார்லிமெண்டுக்கு ஓடோடி வந்தார். இது நடந்தது மார்ச், 29, 1949. மறுநாள் நாடாளுமன்றத்தில், அரை மணி நேரம் வேலை ஒன்றும் நடக்கவில்லை. இந்தக்காலம் போல கிணறு தாண்டும் வைபவம் அல்ல. ஒரே கரகோஷம். எல்லா தரப்பு அங்கத்தினர்களும் சர்தார் படேலை வாழ்த்திய வண்ணம் இருந்தார்கள். பாசமழை. இவர் கண்களில் ஜலதாரை. அதீதமான அன்பு தேனாக வந்து ஓடோடி வந்து பாயும்போது, எஃகு மனிதன் ஏன் அழமாட்டான்? ஆனந்த பாஷ்பம். ஆம். மார்ச், 29, 1949 அன்று படேல் சென்ற விமானத்துடன் தொடர்பு அறுந்தது. விமானி சாமர்த்தியமாக ராஜஸ்தான் பாலைவனத்தில் இறக்கினார். பொடிநடையாக பக்கத்துக் கிராமத்துக்கு. உடனுக்கடி டில்லிக்கு. விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள். யார் சொன்னது சர்தார் படேலுக்கு மக்கள் ஆதரவு குறைவு என்று?



தேசாபிமானத்தில் மூழ்கி எழுந்த ஒரு சான்றோனின் வரலாற்றில் ஒரு சிறிய பகுதி, இது. அவருக்கு செலுத்தும் அஞ்சலி. அதனால்,தற்கால அரசியல் கலப்பை அறவே தவிர்த்து எழுதப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் ‘கல்லை கரைத்த’ அண்ணல் காந்தியின் (அன்றொரு நாள்: நவம்பர் 6 கல்லும் கரைந்த கதை) ‘கல்மனது’ சீடனின் ‘வெல்லப்பாகு’ அரசியல் பரிசோதனையை, அவர் ‘சர்வாதிகாரியாக’ நியமிக்கப்பட்டு, நடத்திய பர்தோலி சத்யாக்ரஹம் பற்றி எழுத நினைத்தேன்.அதை பிறகு தான் எழுதலாம், யாருக்காவது ஆர்வமிருந்தால்,என்று விட்டு விட்டேன். இப்போது என் மனம் நினைவலைகளின் தொக்கி நிற்கிறது.

இங்கு எளிதில் கிடைக்காத இந்திய கருவூலங்கள், அமெரிக்காவில்.அந்நாட்டு விஸ்கான்சின் -மேடிசன் நூலகத்தில் சர்தார் படேலும் பர்தோலி சத்யாக்ரஹமும் என்ற நூல் உளது. அதின் சாராம்சம்: 1927-28 காலகட்டத்தில் குஜராத் மாகாணத்தில் உள்ள பர்தோலியில் குடியானவர்கள் கிஸ்தி (நிலவரி) கட்ட மறுத்து விட்டார்கள். அவர்களை கை தூக்கிவிடும் வகையில் வல்லபாய் படேல் (1875 -1950) ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகள், மடல்கள், ஊடக செய்திகள் எல்லாம் தொகுத்து வழங்கப்படுள்ளன. இது நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு அடிக்கடி பர்தோலி செல்லும் அலுவல் இருந்தது. அருகில் உள்ள உகாய் என்ற பழங்குடிகள் வசிக்கும் இடத்தில் தபதி நதியில் அணைகட்டும் பணியில் இருந்த வாய்ப்பு இன்று கூட என்னை உகாய் செளந்தரராஜன் என்று அடையாளம் காட்டுகிறது. சினிமா பார்க்கக்கூட பர்தோலி/சூரத் செல்ல வேண்டும். அத்தருணம் பர்தோலி கிராமீய முதியோர்களுடன் சர்தார் படேல் பற்றி கேட்டு அறிந்து கொண்டதால் தான் ‘வெல்லப்பாகு’ என்றேன். அவருக்கு சர்தார் என்ற விருது அளித்ததே பர்தோலி/ ஸோன்கட் (அங்கு சிவாஜி கோட்டை ஒன்று உளது.)/உகாய் பழங்குடி பிராந்திய பெண்ணியம். சமுதாயத்தின் விளிம்பின் நுனியில் அல்லாடிக்கொண்டிருந்த அவர்களுக்கு விழிப்புணர்ச்சி, ஒத்துழையாமை, அகிம்சை போராட்டம். விடாப்பிடி போர்க்குணம் ஆகியவற்றை பயிற்று வைத்த சர்தார் வல்லபாய் படேல், அவர்களுக்கு வெல்லப்பாகு மனிதன் தான். இந்த ‘கல்மனது’ மனிதனை கண்டு அஞ்சியது, கலோனிய அரசு.’வெட்டு ஒன்று, துண்டு இரண்டு’ என்று பேசுவதால், உள்குத்து பயில்வான்கள், பிரிவினை வாதிகள், நாட்டுப்பற்றற்றவர்கள், உண்டகத்திற்கு இரண்டகம் செய்பவர்கள், கோள் கூறுபவர்கள் ஆகியோருக்கு, அவர் காலபைரவனாகத்தான் காட்சி அளித்தார்.

அவருடைய பிறந்த நாள் கூட ஊகம் தான். தன் பள்ளிச்சான்றுகளில் அவர் எழுதியபடி இன்று தான் அவருடைய பிறந்த நாள் (அக்டோபர், 31, 1875). சராசரி கிராமீய வாழ்க்கை. கல்வித்தரம் சுமார் தான். 22வது வயதில் தான் பள்ளிப்படிப்பு முடிந்தது. தன் 35வது வயதில் இங்கிலாந்து சென்று அவர் பாரிஸ்டர் ஆனதற்கு முன்கதையும் உண்டு. எங்கள் வீட்டில் வித்தல் பாய் படேலின் படம் இருந்தது. அவர் வல்லபாயின் அண்ணன். சட்டசபை அக்ராசனராக இருந்த அவர் கலோனிய அரசுக்கு சிம்ம சொப்பனம். இருவருமே V.J.Patel. வல்லபாய்க்கு பாரிஸ்டர் படிக்க வந்த நுழைவுச்சீட்டைப் பார்த்த வித்தல்பாய், ‘மூத்தவன் வீட்டில் இருக்க, இளையவனுக்கு மேல்படிப்பா?’ என்று வினவ, ‘வெல்லப்பாகு’வல்லபாய் விட்டுக்கொடுத்தார். பல வருடங்களுக்கு பிறகு தான் 35 வயதில் பாரிஸ்டர் ஆனார். குறுகிய காலத்தில் தேர்வு. வழக்கறிஞராக, நல்ல கியாதியும், வரவும். அங்குமிங்கும் பேச்சில் அவர் கிராமத்து படிக்காத மேதை என்று தான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்தது.

1918ல் ஒரு திசை திருப்பம். ஏற்கனவே, இந்த பதிவு நீண்டுவிட்டது. சர்தார் படேலை பற்றி எழுத எத்தனையோ சமாச்சாரங்கள் உளன. முடியா பட்டிமன்றங்களும் உண்டு. திசை திரும்பியதும், பிற்கால நிகழ்வுகளும், இந்தியா உருவானதும் பற்றி எத்தனையோ விஷயங்கள். அவ்வாறு தொடருவதும், உசாத்துணை அளிப்பதும் வாசகர்களின் ஆர்வத்தைப் பொறுத்து இருக்கிறது.

எதற்கும் வேளை வரணும்!

-#-
சித்திரத்துக்கு  காப்புரிமை & நன்றி:
http://www.internationalnewsandviews.com/wp-content/uploads/2014/10/Rashtriya-Ekta-Diwas-31-OCTOBER-2014.jpg

பின்குறிப்பு 1: இன்று இந்திரா காந்தி அவர்களின் அஞ்சலி தினம். அவரை பற்றி நான் ஏற்கனவே எழுதியிருந்தபடியால், இன்று எழுதவில்லை.
பின்குறிப்பு 2: சர்தார் படேலை கடுமையாக விமரிசிக்கும் நூல் ஒன்று போனவருடம் வெளி வந்தது: Noorani A.G. (2013) The Destruction of Hyderabad: Delhi: Tulika Books
பின்குறிப்பு 3: இன்றைய சத்தியப் பிரமாணத்தில் அரசியல் சாயம் இருக்கலாம்.எனினும், இந்தியா ஒன்றுப்பட்ட பிராந்தியமாக ஆளுமை பெற்றதில், சர்தார் படேலின் பணி மகத்தானது என்பது தெளிவு. அதனால், அதை சித்திரக்குறிப்பினால் உணர்த்தினேன்.


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment