Monday, July 20, 2015

பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [2]



பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [2]



இன்னம்பூரான்
ஜூலை 20, 2015

குடியரசு புரிவது என்றால் அது ஒரு வகையான ‘பினாமியா’ என்ற வினா எழுகிறது. தேர்தல் நடக்கவேண்டும்; அதை முறையே நடத்தவேண்டும்; அமங்கலமும் வேண்டா; திருமங்கலமும் வேண்டா; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ‘பினாமி’ போல் இல்லாமல், பொது நலனுக்கு பாடுபடவேண்டும். ஆனால் பாருங்கள். பஞ்சாயத்துத் தலைவிக்கு பினாமி அவருடைய கணவர் பல இடங்களில். முனிசிபல் கெளன்சிலருக்குக் கைத்தடிகள் மெய்/பொய் காப்பாளர்கள். துட்டு புரளும். எம். எல். ஏ என்றால் தடபுடல் தான். அழுத குழந்தை வாயை மூடும். அடுத்த வீட்டுக்கிழவி சாபமிடுவாள். இந்த கரை வேட்டிகள் வெட்டியா படுத்தற பாடு, பல வருஷங்களாக பிரசித்தம். கரை மாறும். உறை மாறாது. எம்.பி. என்றால், அவர் எதிர்வீட்டு எதிராஜுவாக இருந்தாலும், ஆகாயத்துக்கும் அந்தரத்துக்கும் குதியா குதிப்பார். பார்லிமெண்ட் காண்டீனில் வயிறார உண்டு களிப்பார்கள். சுத்துப்படை படுத்தற பாடு இந்த பரமனுக்கே பொறுக்காது. இதற்கும் ஒரு மேல்சாதி ஒன்றுண்டு. அது தான் அமைச்சரின் அருமந்த காரியதரிசி குழு. மணலை கயிறாக திரித்து, தக்ளியில் அதை நூல் நூற்று, சிட்டம் போட்டு காந்திஜியின் கதர் என்று விற்று விடுவார்கள். 

கீர்த்தனாரம்பம் இப்படி இருக்கையிலே, வியத்தகு நிகழ்வு ஒன்று எமக்கு மன மகிழ்வு அளித்தது,எமது அன்பார்ந்த பந்து மித்திர சோதரர்காள்! மொகல்சராய் ஒரு பெரிய ரயில்வே சந்திப்பு. ஜாமான்கள் பொட்டிப்பொட்டியாக, மலைபாம்புகள் போல வந்து போகுமிடம். அவ்விடத்து பிரதிநிதி பப்பன் சிங் செளஹான் தன் எல்லைக்குட்பட்ட அலிநகருக்கு ஈத் வாழ்த்துக்கள் கூற, கெளன்சிலர் மூர்ஷிதா பேகத்தின் கணவருடன் போய், வசமா மாட்டிக்கிட்டாரு. அங்கு மின்வெட்டும், மின் தட்டுப்பாடும் அன்றாட வாடிக்கை. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயிலாண்டி இல்லையா? கிராமப்புறம் என்றால் இளப்பம் தான். தருமமிகு சென்னை மால் தோறும் கண்ணைப்பறிக்கும் ஜகஜ்ஜால லாந்தர்கள். தாம்பரம் தாண்டினா பம்பரமாக சுற்றினாலும் மருண்ட உலகமே. அப்டின்னா உத்தர் பிரதேச கிராமம் என்றால், அதலபாதாளம் தான். ஆனால் இந்தக்காலத்து ‘விழிப்புணர்ச்சி’ குடிமகன் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறான். ஆக மொத்தம், அலிநகர் மாந்தர்கள் கேட்டது, ‘ஓய்! ரொம்ப நாளாக அந்த விவசாய கனெக்ஷனை அவிழ்த்து விட்டு நகரம் நோக்கி நகரும் இணைப்பு கொடுங்கள். அலி நகர் மொகல்சராயில் உள்ள பேட்டை தானே என்று கரடியா கத்தறோம். கம்னு இருக்கேயே. சொல்லு பதில்.’ என்று அதட்டிக்கேட்டவுடன், சினம் மிகுந்த பப்பன் சிங் செளஹான் எம்.எல்.ஏ. அவர்கள், ‘நான் தான் கலைக்டர் கிட்டேயும், பொறியாளர் கிட்டேயும் சொல்லிட்டினே.’ என்று திருப்பி அதட்ட, கோபாவேசம் தலை தூக்க, மக்கள் அவர்கள் இருவரையும் கயிற்றால், அமர்ந்திருந்த நாற்காலிகளில் கட்டி விட்டனர். நாலுமணி நேரம் கேரோ! கலைக்டர் கிட்டேயும், பொறியாளர் கிட்டேயும் கதறினார்கள். ஊஹூம். நோ ஹெல்ப். அப்றம் போலீஸ் வந்து சமரசம் செய்தார்களாம். ஆனால் பாருங்கள், பந்து மித்திர சோதரர்காள் ! அந்த பப்பன் சிங் செளஹான் எம். எல். ஏ. ஹிந்து இதழிடம் சொன்ன பொன் வாக்கு, “ நான்கு மணி நேரம் கட்டுண்டு இருந்தோம். உதவி வரவில்லை. சட்டசபையில் புகார் செய்வேன்!!!!!!!!!”. டொண்டானுக்குண்டொய்!!!

சர்வ வல்லமையுடைய பாரதமாதாவே! உனக்கு இத்தகைய மைந்தர்கள் தேவையா???
-#-

No comments:

Post a Comment