Friday, January 15, 2016

சும்மா கிடப்பதே சுகம்! 16 01 2016

சும்மா கிடப்பதே சுகம்!



இன்னம்பூரான்
16 01 2016

களிப்புடன் பெருக்கெடுத்து , ஓடியாடி உருண்டோடி வந்தாலும், நதி மவுனமாகவே கடலில் சங்கமித்து விடுகிறது. அன்றொரு நாள் திருவையாற்றில் ஒரு சங்கீதக்கச்சேரி கேட்கப்போனேன். அங்கொரு சுட்டிப்பொண்ணு, இரண்டு வயது குட்டிப்பொண்ணு அதகளம் செய்து கொண்டிருந்தாள். அந்த அழகில் மயங்கிய ரசிகர் பட்டாளம் செவியை மட்டும் பாட்டுக்குக் கொடுத்து விட்டு, கண்கள் சொக்கச் சொக்க, இந்த குழந்தையின் விளையாட்டை ரசித்து வந்தார்கள். ஒரு வினாடி ஏறி குதித்தாள். அடுத்த வினாடி ஆழ்ந்து உறங்கி விட்டாள். ‘சும்மா கிடந்து அவள் கண்ட சுகமும்’ அழகு தான்.

‘...”பழையதை தின்று விட்டு சும்மா கிடக்கும்” மனப்பக்குவம் எப்போது வரும்?.’ “ என்ற வினாவை எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. அப்படியானால், நாம் கடமையாற்றவேண்டும் என்று வருத்திக்கொள்வது எல்லாம் வீண் தானா? ‘Que Sera! Sera’ என்று ஃபிரெஞ்சு மொழியில் சொல்வார்கள். அதாவது, நடப்பது நடந்தே தீரும்.

‘இல்லாத காரியத்தை இச்சித்து சிந்தை வழிச்
செல்லாமை நல்லோர் திறங்காண் பராபரமே’ 

என்று தாயுமானவர் அருளியதின் பொருள், இச்சை தான் நம் சிந்தையை இயக்கி பாடாய் படுத்துகிறதோ என்று தோன்ற வைக்கிறது.


ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அது வரினும் வந்தெய்தும்-ஒன்றை 
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாழும் ஈசன் செயல். (நல்வழி-27)

இது அவ்வையார் அருளிய நல்வழி. சும்மா கிடக்க நான் நினைப்பது ஒன்று, அது ‘ஒழிந்திட்டு’ என்னை எழுத வைப்பது யாரு? இதோ விடை! நினையாதது முன் வந்து நிற்பது ஈசன் செயல் என்று அவரும் பட்டாங்கில் செப்பி விட்டுச்'சட்'டென்று' சென்று விட்டார்.

மாட்டிக்கொண்டு முழிப்பது நீங்கள் என்று யான் சொல்லமுடியாது, இந்த ஆனானப்பட்ட டெலீட் பட்டனும் , வாக்கும், வாதமும் இருக்கும் வரை. தலைப்பை எழுதி விட்டு சிந்தையில் ஆழ்ந்த போது, சும்மா கிடத்தும் உறக்கம் வந்த போதிலும், ஒரு கபீர் தாசரின் விமர்சனம் [‘Que Sera! Sera’] வந்து எய்தியது, அவ்வைப்பாட்டியின் வாக்கை பொய்க்காமல். விடலாமோ!

कबीरा किया कुछ न होते है, अन किया सब होय।
जो किया कुछ होते है , कर्ता और कोय ॥

‘தான் செய்து நடப்பதில்லை, கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ 
தான் செய்து நடப்பனப் போல் காண்பீர், செய்விப் பவனவன் யாரோ’


சுருங்கச்சொல்லின், அடித்துப்பிடித்துக்கொண்டு செய்தாலும், சுகமாக சும்மா கிடந்தாலும், 
‘தான் செய்து நடப்பதில்லை, கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ 
தான் செய்து நடப்பனப் போல் காண்பீர், செய்விப் பவனவன் யாரோ’

இது எல்லாம் ஒரு கபீர் தாசரின் திடீர் உபயம்.

கடவுளை கொண்டு வர எத்தனை உத்திகள் பாருங்கள்! தாயுமானவர் சிவராத்திரியில் தூங்கி வழிந்து ‘சும்மா கிடக்கும் சுகத்தை இப்படி வருணிக்கிறார்.


ஆராயும் வேளையில் பிரமாதி யானாலும்
ஐய வொரு செயலுமில்லை [ஆமாம்! ஆமாம்!]

அமைதியொடு பேசாத பெருமைபெறு குணசந்த்ர
ராம் என இருந்த பேரும்
நேராக ஒரு கோபம் ஒருவேளை வர அந்த
நிறைவொன்றும் இல்லாமலே
நெட்டுயிர்த்துத் தட்டழிந்து உளறுவார். [ஆமாம்! ஆமாம்!]

வசன
நிர்வாகர் என்ற பேரும்
பூராயமாய் ஒன்று பேசுமிடம் ஒன்றைப்
புலம்புவார்.  [ஆமாம்! ஆமாம்!]


சிவராத்திரிப்
போது துயிலோம் என்ற விரதியரும் அறிதுயில்
போலே இருந்து துயில்வார் [ஆமாம்! ஆமாம்!]

பாராதி தனிலுள்ள செயலெலாம் முடிவிலே
பார்க்கில் நின் செயல் அல்லவோ [ஆமாம்! ஆமாம்!]
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே

ஆமாம்! இந்த ‘வியர்த்தமான’ கட்டுரை எழுதும் விபரீதம் யாது என்று நீவிர் வினவினால், இதோ பதில்.

இன்று National Nothing Day in California. அப்படி ஒன்றை நிறுவி விட்டு அதில் நம்மை 'அம்போ' என்று விட்டு விட்டுப் போனவரை பற்றி நமக்கு தெரியாமல் இருப்பது நல்லது தான். தெரிந்து விட்டால் அது நத்திங் இல்லை. சம்திங்க் ஆகி விடும் என்கிறார், ஆண்டி ரூனி.

ஆளை விடுங்க சார்/மேடம். இன்று National Nothing Day என்பதால் ‘சும்மா கிடப்பதே சுகம்' என்ற மர்மத்தைப் பற்றி something எழுதிவிட்டேன்.

சுபம்.
பி.கு. இன்று காணும் பொங்கல். சும்மா சுத்திட்டு வாங்க.

சித்திரத்துக்கு நன்றி:https://anandchelliah.files.wordpress.com/2015/09/charlie-chaplin.jpg?w=535

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment