Wednesday, February 8, 2017

இதுவும் காதல் தானோ!

இதுவும் காதல் தானோ!

இன்னம்பூரான்
28 06 2014/07 02 2017
பிரசுரம்:http://www.vallamai.com/?p=74937

வனமாலி மஹாபாத்ரா பூரி ஜகந்நாத் கோயில் பண்டா (பூசாரி) ஒருவரின் மூத்தமகன். படிப்பெல்லாம் சொற்பம் தான். கோயில் மணி அடிக்க படிப்பு எதற்கு என்று அவருடைய தந்தை ஜகந்நாத் பண்டா, வனமாலியின் படிப்பை எட்டாங்கிளாஸ்ஸுடன் நிறுத்தி விட்டார். அது வரை விட்டுப்பிடித்ததே பெரிது. ஆனால், அவர் இவனை படிக்கவே விடமாட்டார். அதிகாலையில் தொடங்கும் பகவத் கைங்கர்யம் நடு நிசி வரை நீடிக்கும், பகவத் கைங்கர்யம் ‘கல கல’ என்று கனகதாரை பொழியும் என்பதால். எல்லா கோயில்களிலும் நாம் சம்பிரதாயமான பூஜை புனஸ்காரம் காண்கிறோம். சாமரம் வீசுவதிலிருந்து சடாரி சாதிக்கும் வரை, அபிஷேகம் செய்வதிலிருந்து ஆராதனை செய்யும் வரை, எல்லாமே சாஸ்திரோக்தமாக. இம்மி பிசகக்கூடாது. பிசகினால், பக்தியை மறந்த ஆயிரம் பிராமணோத்தமர்கள் ‘பிலு பிலு’ வென்று சண்டைக்கு வருவார்கள். பகவானை திரஸ்கரித்து கோயிலிலிருந்து வெளி நடப்பு செய்வார்கள். பரங்கி துரைத்தனத்தாருக்கு அநாமதேய புகார் மனு அனுப்புவார்கள். சார்! இது பழங்கதை. நூறாண்டுகள் ஆகப்போகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதான் பரங்கி துரைத்தனத்தார். இத்தனைக்கும், அவன் மிலேச்சன்; கிருஸ்துவன்; குடிகாரன்.

திருப்பதி ‘மிராசு’ போல இங்கும் உரிமை பாராட்டும் பண்டா பிரமுகர்கள் உண்டு. பல ஆண்டுகளாக, பக்தகோடிகளின் அனுக்ரஹத்தால், இவர்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது. மயிலிறகு வைக்காமலே இவர்களது வங்கி சேமிப்பு புத்தகம் குட்டி போடுகிறது. அபரிமிதமான பொன்மாரி பெய்வதால், இவர்களது லேவாதேவி வியாபாரம் கந்து வட்டி அசுரகுட்டிகளை ஈன்றெடுக்கிறது. பகவான் ஜெகந்நாத் இந்த ஈனச்செயல்களை கண்டிக்கிறான். அவனை யார் கேட்டது? விவாஹ சுபமுஹூர்த்தில், அந்த பிள்ளையாண்டான் பெண்ணுக்கு மாங்கல்ய தாரணம் செய்யும்போது கெட்டி மேளம் கொட்டச்சொல்வதே, அமங்கல சொற்கள் காதில் விழாக்கூடது என்பதற்கு. இங்கே பகவானின் சொற்களை கேட்கக்கூடாது என்று தான் பயங்கர ஒலி தரும் கண்டாமணிகளை அடிக்கிறார்கள் போலும்!

இந்த சம்பிரதாயமான பூஜை புனஸ்காரம்,சாஸ்திரோக்தம் மட்டும் தான் பூரி ஜகந்நாத் கோயிலில் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். சொல்லப்போனால், அந்த பிராந்தியத்துக்கே எஜமானன்  ஜகன்னாதர் தான். எல்லார் வீட்டிலும் தவழும் குழந்தையும் அவரே. ஊழியம் நிமித்தமாக, நான் பூரி செல்ல நேரிடும் என்றாலும், அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு ஜகன்னாதன் தரிசனத்துக்கு செல்வது உண்டு. இரவு கொடுக்கும் மஹா பிரசாதம் ஒரு படி சாதம். அங்கு விளையும் நெல்லை போரடிக்க யானை வேண்டும். அத்தனை அபரிமிதமான விளைச்சல் பூமி. அந்த பிரசாதத்தை இரண்டு நாள் சாப்பிடலாம். ஊரே சில நாட்கள் பொலிவு இழந்து கிடக்கும். கேட்டால், வருத்தத்துடன் அவனுக்கு ஜலதோஷம் என்பார்கள். காலையில் பல் தேய்த்து விட்டு, முகம் அலம்பின பின் கஷாயம் கொடுப்பார்கள். குழந்தை ஜகன்னாதன் குடிப்பதாக பாவனை செய்வதால், பண்டா மனது வைத்தால், நமக்கு அருமருந்து பிரசாதமாகவும் கிடைக்கும். கறாராக தக்ஷிணையும் வாங்கி விடுவான். கோயிலுக்கு எதிரே மிகவும் அகலமான கிராண்ட் ரோடு. திருவிழா அன்று லக்ஷோபலக்ஷம் மக்கள் வடம் பிடிக்க, அண்ணன் பலபத்ரன், ஜகன்னாதன், தங்கை சுபத்ரா மூவருக்கும் தனித்தனி தேர். சாலையின் அடுத்த முனையில் இருக்கும் அத்தை வீட்டுக்கு போகும் காட்சி அபாரமாக இருக்கும். கண்டாமணி சத்தம் வானை பிளக்கும். பூரி மாஜி மகராஜா தங்க விளக்குமாறால், தேரின் தளத்தை சுத்தம் செய்த பின், கலெக்டர், மந்திரிமார், முதல்வர் எல்லாரும் கும்பிட்ட பின். ஆடி , அசைந்து, அந்த மூன்று தேர்களும் செல்வது கண்கொள்ளா காட்சி. அத்தை வீட்டில் கொம்மாளம் அடிக்கப் போராங்களாம்!

தொடரப்போவது: நான் கடவுளை பார்க்கப்போன படலம்.

சித்திரத்துக்கு நன்றி: 



No comments:

Post a Comment